கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் ஆல்பேட்டை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் இன்று(ஆக.6) சிறுவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு சிறுவனின் கையில் கை துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த சிறுவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த கை துப்பாக்கியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலுக்கு நின்ற போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீஸார் ஆட்சியர் அலுவலக பகுதிக்கு சென்று அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அந்த துப்பாக்கி சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும் அந்த துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.
ஏர் பிஸ்டல் துப்பாக்கி என்பது போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் போது பயன்படுத்தக்கூடியது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து புதுநகர் போலீஸார் அந்த துப்பாக்கியை பெண்ணையாற்று பகுதிக்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரெட்டிச்சாவடி போலீஸார் அந்த துப்பாக்கியை பயன்படுத்தியது யார்? அது எவ்வாறு தென்பெண்ணை ஆற்றில் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.