லக்னோ: குற்ற வழக்கில் உத்தர பிரதேச பாஜக எம்.பி. ராம் சங்கர் கடேரியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் எம்பி பதவியை இழக்கும் சூழல் எழுந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் இட்டாவா பகுதியைச் சேர்ந்தவர் ராம் சங்க் கடேரியா (58). கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது ஆக்ரா தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உ.பி. இட்டாவா தொகுதியில் இருந்து எம்பியாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் மின் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் தனியார் மின் நிறுவன அதிகாரியை, ராம் சங்கர் கடேரியாவும் அவரது ஆதரவாளர்களும் தாக்கினர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆக்ராவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி யது. இதன்படி ராம் சங்கர் கடேரியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் தகுதி இழப்பர். அந்த வகையில் ராம்சங்கர் கடேரியாவும் எம்பி பதவியை இழக்கும் சூழல் எழுந்துள்ளது.
வழக்கு குறித்து கடேரியா கூறியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெண் சலவை தொழிலாளி, அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாக என்னிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக தனியார் மின் நிறுவனத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டேன். அப்போது உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்ததால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். இவ்வாறு கடேரியா தெரிவித்தார்.