குப்பம்: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் நீர் நிலைகளை கண்டுகொள்ளாமல் விட்ட ஜெகன் அரசை கண்டித்து அணைக்கட்டுகள் உள்ள ஊர்களுக்கு திறந்தவெளி வேனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில், நேற்று முன் தினம் மாலை அவர் சித்தூர் மாவட்டம், தம்பலபல்லி மற்றும் புங்கனூர் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், இவர் வருவதை ஆளும் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் சந்திரபாபு நாயுடு தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்யவில்லை. அவர் குறிப்பிட்ட சமயத்தில் இவ்விரண்டு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால், இரு கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடு மீது கற்கள் வீசப்பட்டன. கருப்பு கொடி காட்டப்பட்டது.
சந்திரபாபு நாயுடு செல்லும் பாதையில் லாரிகளை குறுக்கே நிற்க வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் ஒருவருக்கொருவர் உருட்டு கட்டைகளால் தாக்கிகொண்டனர். இவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை வீசி, தடியடி நடத்தினர். இதில் போலீஸார், மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால், தெலுங்கு தேசம் கட்சியை கண்டித்து நேற்று சித்தூர் மாவட்ட பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளும்கட்சியினர் கொடுத்த பந்த் அழைப்பால், சித்தூர் மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் கடைகளை அடித்து நொறுக்கினர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வழியாக திருமலை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆந்திர அரசு பஸ்ஸில் 40 பயணிகள் இருந்தனர். அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார், திடீரென பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பீதியுடன் அலறி அடித்துக்கொண்டு பஸ் நிலையத்தில் உள்ள சில கடைகளின் பின்னால் ஓடி ஒளிந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் ஆவர். அதன் பின்னர் வேறு எந்த பஸ்களும் வராததாலும், பந்த் என்பதை அறியாமல் ஊரை விட்டு வந்ததாலும், மாலை வரை அவர்கள் பஸ் நிலையத்திலேயே பீதியுடன் காத்திருந்தனர்.