பாகிஸ்தானின் ராவல்பிண்டி செல்லும் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் இன்று காலை தடம்புரண்டன. ஷாஜத்பூர் – நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகியிருப்பதாகவும், 80-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக மீட்புக் குழுவினர் சென்றதால் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய ரயில்வே துணை கண்காணிப்பாளர் மஹ்மூத் ரஹ்மான், “சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டிருக்கிறது. தடம்புரண்ட 10 பெட்டிகளிலிருந்தும் மக்களை மீட்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ரயில் தடம்புரண்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நவாப்ஷாவில் உள்ள மக்கள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். விபத்து நடந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் அவசரகால நெறிமுறை விதிக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.