கராச்சி : பாகிஸ்தானில் பயணியர் ரயில் நேற்று தடம் புரண்டதில், அதில் பயணம் செய்த 30 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹசரா எக்ஸ்பிரஸ் எனப்படும் பயணியர் ரயில், கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று சென்றது.
இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த ரயில் நவாப்ஷா மற்றும் ஷாஜத்பூர் என்ற பகுதிகளுக்கு இடையே சென்றபோது, சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டது.
இந்த விபத்தில், ரயிலின் 10 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இதில், ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி, 30 பேர் பரிதாபமாக பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரயில் பெட்டிகளின் நடுவே சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் பலரை மீட்கும் பணி தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள், 18 மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கும் என்பதால், அவ்வழியில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுஉள்ளன.
விபத்து குறித்து பாகிஸ்தான் ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பிரேக்குகளை தாமதமாகப் பயன்படுத்தியதால் விபத்தின் தீவிரம் கடுமையாக உள்ளது.
‘சில மணிநேரங்களில் இயந்திரங்களை பயன்படுத்தி தடம் புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்படும். பின்னர் அந்த தடத்தில் ரயில் சேவை சீராகும்’ என்றார்.
ரயில் விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அது குறித்த விசாரணையை பாக்., ரயில்வே துறை துவங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்