சென்னை: என்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் தரப்பு பிரச்சினையை தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசும், என்எல்சி நிர்வாகமும் ஆக.22-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது, ஊதிய உயர்வுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி, என்எல்சி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க தொழிலாளர்கள் தரப்பில் ஒப்புதல்தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகளை போலீஸார் செய்து கொடுத்துள்ளதாகவும், ஆனால், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து என்எல்சி நிர்வாகம் தங்களது உரிமைகளை பறித்து வருவதாகவும் தொழிற்சங்கத்தினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு என்எல்சி தரப்பில், ‘‘பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி மூப்பு அடிப்படையில்அவர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றி வருகிறோம். அனைவரையும் ஒரே நேரத்தில் நிரந்தரம் செய்து மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் கோருவதால் அதை ஏற்க முடியாது. ஏற்கெனவே, என்எல்சியில் மத்தியஸ்தம் செய்யஅதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழுஇருக்கும்போது, அதை புறம்தள்ளிவிட்டு வெளியில் இருந்து ஒரு மத்தியஸ்தரை நியமிக்க முடியாது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றம் என்எல்சிக்காக மட்டுமல்ல. தொழிலாளர்களின் நலனுக்காகவும்தான் உள்ளது என்பதைமறந்து விடக்கூடாது. நிலக்கரி தீர்ந்துவிட்டால் நிலம் கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்கமாட்டார்கள். அதேநேரம் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியை கைவிட்டுவிட முடியாது. தமிழகத்தில் உள்ள 7 கோடி பேருக்கு ஒருலட்சம் போலீஸார்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் என்எல்சிக்கு அனுப்ப முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிப்பது குறித்து மத்திய அரசும், என்எல்சி நிர்வாகமும் வரும் ஆக.22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.