கார் மார்க்கெட் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக இருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டம் என்பதால் கவலையில் இருந்த நிறுவனங்களுக்கு இந்த விற்பனை அதிகரிப்பு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சில நிறுவனங்கள் அதிகமான வாகனங்களை டெலிவரி கொடுத்திருக்கின்றன. சில நிறுவன கார்கள் விலை மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவை காரணமாக இறக்கத்தையும் சந்தித்திருக்கின்றன. அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் விற்பனையில் டாப் 5 இடத்தில் இருக்கும் கார்களின் பட்டியலை பார்க்கலாம்.
மாருதி சுசுகி:
மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் கடந்த மாதத்திற்கான கார் விற்பனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 1,52,126 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது year-on-year விற்பனை 6.49 சதவீதம் அதிகரித்துள்ளதை குறிக்கிறது மற்றும் மொத்த விற்பனை 9,276 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி சுசுகி 1,42,850 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
ஹுண்டாய்:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஜூலை மாதத்திற்கான விற்பனை தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் இந்த ஜூலை 2023-ல் 50,701 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஜூலை 2022-ல் விற்றதை விட இது 201 யூனிட்கள் அதிகமாகும். இதன் மூலம் year-on-year வளர்ச்சி விகிதம் 0.39 சதவீதம் அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்:
டாடா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறது. ஆனால் இதன் பல தயாரிப்புகளுக்கு ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷன் தேவைப்படுகிறது. இந்தியாவில் நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரியின் புதிய வெர்ஷன்களை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த ஜூலை 2023-ல் 47,628 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை செய்த 47,505 யூனிட்களை விட இது 123 யூனிட்கள் அதிகமாகும்.
மஹிந்திரா:
மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனம் இந்தஜூலை 2023-ல் மொத்தம் 36,205 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்றிருக்கிறது. இது year-on-year வளர்ச்சியில் 29.05 சதவீதம் அதிகரிப்பை குறிக்கிறது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் நிறுவனம் மொத்தம் 28,053 யூனிட் பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
டொயோட்டா:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்த ஜூலை 2023 -ல் மொத்தம் 20,759 யூனிட் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 19,693 யூனிட்களை விற்றது. மொத்த விற்பனையில் 1,066 யூனிட்கள் அதிகரித்திருப்பதோடு year-on-year வளர்ச்சியும் 5.41 சதவீதம் அதிகரித்துள்ளது.