வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை குறித்த தகவல்களை வெளியிடுவதை, சீனா நிறுத்தியுள்ளது.
கடந்த ஜூலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமடைந்துள்ளதாக, அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் காரணமாக இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது குறித்த தகவல்களை வெளியிடுவதை, சீனா தவிர்த்துள்ளது.
ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட நகர்ப்புறத் தொழிலாளர்களில் 21.3 சதவீதம் பேர், கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த பிறகும் இன்னும் வேலை கிடைக்காமல் உள்ளனர்.
சீன அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நகர்ப்புற தொழிலாளர்களிடையே, ஒட்டுமொத்த வேலையின்மை, ஜூலையில் 5.30 சதவீதமாக உள்ளது. இது ஜூன் மாதத்தை விட 0.10 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், வேலைவாய்ப்பு நிலைமை ஸ்திரமாக உள்ளது.
ஜனவரி—மார்ச் காலகட்டத்தில், 2.20 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 0.80 சதவீதமாக சரிந்தது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக குறைவான வளர்ச்சியாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் அளவுகள் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், சீன அரசாங்கம், நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான ஊக்கம் ஏதும் அளிக்காமல், பொருளாதாரத்தை சீர் செய்ய நினைக்கிறது.
அந்த முயற்சி, ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு மற்றும் கட்டுமான இடைநிறுத்தம் போன்ற காரணங்களால், மக்களும் வீடுகளை வாங்கத் தயங்குகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் துறை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு தொழில்முனைவோருக்கு உதவுவதாக உறுதியளிப்பதன் வாயிலாக, வணிகத்தையும் நுகர்வோர் நம்பிக்கையையும் புதுப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால், அதற்கான முதலீடு மற்றும் கொள்கை மாற்றங்களை இதுவரை மேற்கொள்ளவில்லை.
சீன அரசாங்கம், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தை புதுப்பிக்க முயற்சித்தாலும், அதன் கட்டுப்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற சூழலால், பல நிறுவனங்கள் முதலீடுகளை திரும்பப்பெருகின்றன அல்லது, தாமதப்படுத்தி வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement