பனாஜி: நாட்டிலேயே முதல் முறையாக கோவா அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.
இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகளுக்கு மிகவும் பொதுவான செயற்கை கருத்தரிப்பு முறையாக ‘இன் விட்ரோ கருத்தரிப்பு (ஐவிஎப்)’ சிகிச்சை விளங்குகிறது. இந்நிலையில் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச ஐவிஎப் சிகிச்சையை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது.
ஐவிஎப் சிகிச்சை மையத்துடன் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஏஆர்டி) மற்றும் இன்ட்ரா கருப்பையக கருவூட்டல் (ஐயூஐ) மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பிரமோத் சாவந்த் பேசும்போது, “மருத்துவ சேவையில் கோவா மற்றொரு மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவத் துறை ஏராளமானோரின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இத்துறைக்கு ஆண்டுக்கு 19,000 புறநோயாளிகள் வருகின்றனர். சுமார் 4,300 கர்ப்பிணிகள் மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்” என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசும்போது, “நாட்டிலேயே இலவச ஐவிஎப் சிகிச்சை வழங்கும் முதல் மருத்துவமனை இதுவாகும். நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்படாது. தொழில் நிறுவனங்களின் சமூக கடமை (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து முழு நிதியுதவி பெறப்படும். இங்கு இலவச ஐவிஎப் சிகிச்சை பெறுவதற்கு ஏற்கெனவே 100 பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்” என்றார்.