தி.மு.க தென்மண்டல அளவிலான பாக முகவர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதற்காக ராமநாதபுரம், தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேராவூர் அருகே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தென்மாவட்டங்களிலிருந்து 10 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் 17,000 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரத்துக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு, மாவட்ட எல்லையான பார்த்திபனூரிலிருந்து ராமநாதபுரம் வரை 35 இடங்களில் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலமைச்சரை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பிற்பகல் பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒருகாலத்தில், `தண்ணீர் இல்லாத காடு’ என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரத்துக்கு, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தேன். வேளாண் வளர்ச்சிக்காக பார்த்திபனூரில் மதகு அணை கட்டினோம். அமைச்சர் சூப்பர் தங்கவேலன் குறிப்பிட்டதைத் தொடர்ந்து 500 மீட்டர் மாநில நெடுஞ்சாலையைத் தரம் உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினோம். தேவிபட்டினம் அண்ணா அரசு பொறியல் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் , சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பகுதியில் ஐந்தாயிரம் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள், உயர்மட்ட பாலங்கள், பாலைவனப் பூங்கா போன்ற திட்டங்களால் பின்தங்கியிருந்த மாவட்டம் இன்று முன்னுக்கு வந்திருக்கிறது.

கடந்த 18 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் தங்கத்தேரை, தி.மு.க ஆட்சியில் ஓடவைத்திருக்கிறோம். ராமநாதபுரத்தில் கூட்டம் நடத்த ஒருமனதாக முடிவெடுத்தோம். அது சரியான முடிவுதான் என்று நிரூபிக்கக்கூடிய வகையில், இங்கு அனைவரும் கூடியிருக்கிறீர்கள். ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனும், மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கமும் போட்டி போட்டுக்கொண்டு கட்சியை வளர்த்துவருகின்றனர். அவர்கள் இருவருக்கும் எல்லாவற்றிலுமே போட்டிதான். என்ன போட்டி என்பது உங்களுக்கும் புரியும், எங்களுக்கும் தெரியும். ஆனால், அந்தப் போட்டி எந்த அளவுக்கு எழுச்சியைத் தந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். நம்முடைய சீர்திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் சட்டங்களாக மாற வேண்டும் என கலைஞர் எண்ணினார். அந்தக் கனவை நிறைவேற்றிக் காட்டுகிற காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, அதற்கான மாநாடுதான் இது. வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டுவரும் மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டுமென எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். அதை நிறைவேற்றாதவர்கள்மீது வரக்கூடிய காலங்களில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். நியாயமான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும். தி.மு.க-வின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நமக்கு எதிராக சிறுநரிக் கூட்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வினர், பா.ஜ.க-வினர் எதையும் செய்யாமல், செய்ததாகப் பொய்யாகப் பரப்பிவருகின்றனர். டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும் பேசப்பட்ட அரசியல்கள், தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவருகின்றன. எனவே, அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி, ஆக்டிவாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் கட்டமைப்பையே பா.ஜ.க ஆட்சி சின்னா பின்னமாக்கியிருக்கிறது. இதற்கு 2024-ல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க செய்து கொடுக்கவில்லை. நரேந்திர மோடியைப் பார்த்துக் கேட்கிறேன், அதுவும், ராமநாதபுரத்தில் கேட்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என அழைப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
2014-ம் ஆண்டு ராமநாதபுரத்துக்குப் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, `ராமநாதபுரத்தை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவேன்’ என வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றவில்லை. புயலால் தனுஷ்கோடி அழிந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 17 கிலோமீட்டர் தூரம் மீண்டும் ரயில் பாதை அமைக்க 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னும் வரவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி சுட்ட பல வடைகளில் இதுவும் ஒன்று. தேர்தல் முடிந்தவுடன் வடை ஊசிப்போச்சு. அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். இதேபோல் தமிழ்நாட்டில் பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டன.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
ஒன்பது ஆண்டுக்கால மத்திய பா.ஜ.க ஆட்சியில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவர்கள் கொலைசெய்யப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கின்றன. 2015-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி சொன்னதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. தற்போது வரை அங்கு செங்கல்தான் இருக்கிறது, இப்போதுதான் அதற்கான டெண்டரையே விட்டிருக்கின்றனர். 2015-ல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டருக்கு டெல்லியிலிருந்து உருண்டு வருவதற்கு ஒன்பது ஆண்டுகளாகின்றன. இனியாவது அதை விரைவாகக் கட்டி முடிப்பார்களா, அதுவும் 2024 ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்பது தெரியவில்லை. தமிழகத்திலிருந்து ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யும் பா.ஜ.க அரசுக்கு, ஆயிரம் கோடி ரூபாய் செலவு ரூபாய் செய்து எய்ம்ஸ் கட்ட மனதில்லை.

இதையெல்லாம் கேட்டால் தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்குகிறது பா.ஜ.க. தி.மு.க பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகப் பொய் பரப்புகின்றனர். ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், காமராஜர், அப்துல் கலாம் பிறந்த மண்ணில் பிறவினைவாதமா எனப் பிரதமர் மோடி கேள்வி எழுப்புகிறார். திராவிடக் கழகத்தில் இருந்தவர்தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா…’ என வாயசைத்துப் பாடியவர்தான் எம்.ஜி.ஆர். இதையெல்லாம் பிரதமர் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்றரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி பேசவே இல்லையே… ஏன்?
நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், `மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்குப் பேரழிவு’ எனச் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் பாதம்தாங்கியாக இருப்பவர்தான் பழனிசாமி. அ.தி.மு.க., பா.ஜ.க-வின் அடிமை. பொய் சொல்லித்தான் அ.தி.மு.க-வினருக்கு அரசியல் செய்யத் தெரியும். அவர்களுக்கென்று கொள்கையோ, தியாகமோ கிடையாது. அதனால்தான் தி.மு.க எதிர்ப்பை மட்டுமே நம்பி அரசியல் செய்து, இன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவைக் காப்பாற்றப்போவது `இந்தியா’ கூட்டணிதான். இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாகவே இருக்க வேண்டும்.

தங்களை எதிர்ப்பவர்களைப் பார்த்து பா.ஜ.க-வினர் `ஆன்டி இந்தியன்’ என்று சொல்வது வழக்கம். இந்தியா கூட்டணியை எதிர்க்கும் `ஆன்டி இந்தியர்களாக’ தற்போது பா.ஜ.க-வினர் இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். வெற்றிக்கான களப்பணியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs