கல்லூரிக்குள் வெடிகுண்டு வீச்சு.. "திமுக அரசுக்கு இதைவிட தலைகுனிவு வேண்டுமா..?" காட்டமாக பேசிய எடப்பாடி

சென்னை:
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர்

கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தலைநகரில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதை விட திமுக அரசுக்கு வேறென்ன தலைகுனிவு இருக்க முடியும்” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, ரவுடிகளின் அராஜகம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களின் அடாவடித்தனமும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ரயிலிலும், பஸ்ஸிலும் கத்தி, வாளை எடுத்துக்கொண்டு பயணிப்பது; பொது இடங்களில் மோதிக்கொள்வது என கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

அந்த வகையில், இன்று நடைபெற்றிருக்கும் சம்பவமானது, எந்த அளவுக்கு மாணவர்களின் அராஜகம் தலைத்தூக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே இன்று மோதல் வெடித்துள்ளது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஒருதரப்பு மாணவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கையில் நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? ரவுடிகளை போல மாணவர்கள் அராஜகம் செய்யும் அளவுக்குதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தலைநகரிலே பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்திருக்கிறது என்றால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள். இதைவிட திமுக அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் உண்மையிலேயே மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை தீவிரமாக ஆராய்ந்து இந்த “விடியா” அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.