நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்துக்குப் பெயர் 'சிவசக்தி' – பிரதமர் மோடி அறிவிப்பு

பெங்களூரு: நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி பாயின்ட்’ (Shiv Shakti Point’) எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக இன்று (சனிக்கிழமை) காலை பெங்களூரு வந்தார். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்குச் சென்றார். அப்போது விஞ்ஞானிகள் அனைவரையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடிக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிரதமரிடம் லேண்டர் விண்கலனின் மாதிரியை திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அங்கு விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம். லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவசக்தி பாயின்ட்’ என்றழைக்கப்படும்.

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்” என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு ‘திரங்கா பாயின்ட்’ எனப் பெயர் சூட்டப்பட்டது என்பதையும் பிரதமர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.