ஏதென்ஸ் கிரீஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர்’ என்ற விருதை, அந்நாட்டு அதிபர் கேத்தரீனா சக்கலாரபுலோ நேற்று வழங்கி கவுரவித்தார். இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
:’பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டை முடித்துக் கொண்டு, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பை ஏற்று, ஏதென்ஸ் நகருக்கு நேற்று வந்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் கிரீஸ் வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன், இந்திரா பிரதமராக இருந்தபோது, 1983, செப்., மாதம் கிரீஸ் பயணம் மேற்கொண்டார்.
‘வந்தே மாதரம்’
ஏதென்ஸ் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் கெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார்.
வழிநெடுகிலும் இந்திய வம்சாவளியினர் திரண்டு நின்று, கையில் மூவர்ண கொடியை ஏந்தியபடி, ‘வந்தே மாதரம்’ என கோஷமிட்டு பிரதமரை வரவேற்றனர்.
கிரீஸ் நாட்டின் பழைய அரண்மனை முன் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் அதிபர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிரீஸ் நாட்டின் மிக உயரிய, ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர்’ என்ற விருதை அந்நாட்டு அதிபர் கேத்தரீனா சக்கலாரபுலோ பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
தங்கள் பதவியின் வாயிலாக கிரீஸ் நாட்டின் அந்தஸ்தை உயர்த்திய புகழ்பெற்ற பிரமுகர்களுக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படுகிறது.
இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
விருது பெறும் புகைப்படத்தை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, ‘இந்த சிறப்பு அந்தஸ்தை அளித்த கிரீஸ் அரசுக்கும், மக்களுக்கும், அதிபருக்கும் இந்திய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என, குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 1975ல் நிறுவப்பட்ட இந்த விருதின் முகப்பில், கிரேக்க கடவுளான ஏதெனா உருவம் பொறிக்கப்பட்டு, ‘நீதிமான்கள் மட்டுமே கவுரவிக்கப்பட வேண்டும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ளது.
நல்லுறவு
இதன் பின், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார். அப்போது இரு நாட்டுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு அதிகரித்துள்ளதை பாராட்டிய தலைவர்கள், 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் இரு நாடுகளும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கிரீசில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்றார்.
அப்போது, ”தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு களில் இந்தியாவின் வளர்ச்சி, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
”நிலவில் மூவர்ணக்கொடியை ஏற்றியதன் வாயிலாக, உலகிற்கு தன் திறமையை இந்தியா நிரூபித்துள்ளது,” என்றார்.
மோடி அளித்த பரிசு!
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி, இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலை பொருட்களை தலைவர்களுக்கு பரிசாக அளித்தார். தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்ட, ‘சுராஹி’ எனப்படும் பாரம்பரிய கலை பொருளான குடுவையை தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு பரிசாக அளித்தார். நாகாலாந்து பழங்குடியினர் கைகளால் நெய்யும் பல நுாற்றாண்டு பாரம்பரியம் உடைய சால்வையை அதிபரின் மனைவிக்கு பரிசாக அளித்தார்.மத்திய பிரதேசத்தின் கோண்டு பழங்குடியினர் வரைந்த கோண்டு ஓவியத்தை, பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவுக்கு பரிசாக அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்