ஆஜரான செந்தில் பாலாஜி… நீதிமன்ற வளாகத்தில் குவிந்த கோவை மேயர், மா.செ-க்கள் முதல் தொண்டர்கள் வரை..!

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆகஸ்ட் 12-ம் தேதி நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, காவல்துறையினர் செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். செந்தில் பாலாஜி நேரில் ஆஜராவதை அறிந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், இன்று காலையே 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். 

செந்தில் பாலாஜி

கோவை மேயர் கல்பனா, திருவரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டி, கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர்களான தளபதி பாண்டியன், தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து போலீஸார் ஆட்சியரகத்துக்கு வெளியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தத் தொடங்கினர்.

கோவை மேயர் கல்பனா

இதைக் கண்ட தி.மு.க தொண்டர்கள் சுமார் 30 பேர், `எப்படியும் இன்னைக்கு அண்ணனைப் பார்த்தே ஆகணும்’ என்ற முடிவில் ஆட்சியர் அலுவலக வராண்டாவுக்குள் சென்றுவிட்டனர். செய்தியாளர்கள்கூட உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே மதியம் 1:55 மணியளவில் செந்தில் பாலாஜி போலீஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தார். கடந்த முறை தாடியுடன் இருந்த செந்தில் பாலாஜி, இந்த முறை ஷேவிங் செய்திருந்தார். 

செந்தில் பாலாஜி

அவரை யாரும் தொந்தரவு செய்ய முடியாதபடி, காவல்துறையினர் அவர் செல்லும் பாதையின் இருபக்கமும் கயிறு கட்டியிருந்தனர். ஆனால் அதையும் மீறி உள்ளே காத்திருந்த தொண்டர்கள், செந்தில் பாலாஜியுடன் வீடியோ, செல்ஃபி எடுக்க முயன்றனர். “அண்ணே ஒரு தடவை இந்த கேமராவைப் பாருங்கண்ணே” என்று அவர்கள் கேட்க, செந்தில் பாலாஜி மௌனமாக கடந்து சென்றார். கூட்டத்தைச் சமாளித்து, செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்று, போலீஸார் ஆஜர்படுத்தினர். 

முதலில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி ரவி, PMLA சட்டத்தின்கீழ் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அந்தச் சட்டப்பிரிவில் உள்ளபடி செஷன் கோர்ட் எனப்படும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகும்படி கூறினார்.

அமலாக்கத்துறை தரப்பிடம் விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து கேட்டபோது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், “செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துவிட்டது. குற்றம்சாட்டபட்ட மற்றவர்களுக்கு எதிரான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. அவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன” என்றார். இதையடுத்து நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

விசாரணை முடிந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி வணக்கம் தெரிவித்துவிட்டு போலீஸ் ஜீப்பில் ஏறினார். செந்தில் பாலாஜி தரப்பை பொறுத்தவரை நாளையோ அல்லது நாளை மறுநாளோ ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுக உள்ளனர். அதே நேரம் அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளனர். முக்கியமாக அவர் அமைச்சராக நீடிப்பதாலும், அதிகாரம் மிகுந்த பதவியில் இருப்பதாலும், அவரை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும்… ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது அமலாக்கத்துறையின் முக்கிய வாதமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும். வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பதிலும், செந்தில் பாலாஜிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஜாமீனா… விரைவில் தீர்ப்பா என்பது அடுத்தடுத்த கட்ட நகர்வுகளில் தெரிந்துவிடும். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.