கர்நாடக அணைகளில் இருந்து, வினாடிக்கு 5,000 கன அடி வரை, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை தருவதில் கர்நாடக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அணைகளில் போதிய கையிருப்பு நீர் இல்லை; மழை பொழிவு இல்லை என அது காரணம் கூறி வருகிறது.
தமிழகத்துக்கு நீர் தர, அம்மாநில கட்சிகளும் எதிர்ப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்ற முறையீடு வாயிலாக தீர்வு காண முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல, பெங்களூரிலிருந்து கர்நாடக அரசு அதிகாரிகளும், புதுடில்லியில் இருந்து காவிரி ஒழுங்காற்றுக்குழு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில், ஆகஸ்ட் மாதம் தர வேண்டிய 45 டி.எம்.சி., நீரில் உரிய பங்கை தராமல் இருப்பதை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக தர அதிகாரிகள் வலியுறுத்தினர்.
செப்டம்பரில் தர வேண்டிய 36 டி.எம்.சி., நீரையும் தர வேண்டும்; அவ்வாறு தந்தால் மட்டுமே, குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றும் எடுத்து கூறப்பட்டது.
இதையடுத்து, ஒழுங்காற்றுக்குழு சார்பில், வினாடிக்கு 7,200 கன அடி வரை காவிரி நீரை திறந்துவிட பரிசீலிக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால், இதற்கு கர்நாடகா ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து நடந்த ஆலோசனையின் முடிவில், ஏற்கனவே, 1,900 கன அடி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடும் நிலையில், கூடுதலாக, 3,100 கன அடி நீருடன் மொத்தம் வினாடிக்கு 5,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்