சந்திரயான்-3 வெற்றி நம்பமுடியாத ஒரு சாதனை: உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா

புதுடெல்லி: சந்திரயான்-3 வெற்றி நம்பமுடியாத ஒரு சாதனை என்றும், இதற்காக இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டும் என்றும் உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு வருகை தந்த அவர், பின்னர் புதுடெல்லி திரும்பி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காஷ்மீருக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காஷ்மீர் இந்த அளவு இயற்கை எழில் நிறைந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காஷ்மீரின் இயற்கை அழகு என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. காஷ்மீரில் இயற்கைக் காட்சிகள் நிறைய இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால், நான் பார்த்தது உண்மையில் மனதை கொள்ளை கொள்ள வைத்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நம்பமுடியாத ஒரு சாதனை. இதற்காக இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டும். இதேபோல், இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாடு, ஒரு அற்புதமான வாய்ப்பு. உலகத் தலைவர்கள் இங்கு வந்து, காலநிலை மாற்றம் உள்பட நமது பூமியை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். இதன்மூலம், நாம் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்யலாம். நான் அதை எதிர்நோக்குகிறேன்.

பாலிவுட் படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். ஷாருக்கானின் படத்தில் நடிப்பது மிகவும் அருமையாக இருக்கும். இயக்குநர் சஜித் நதியத்வாலாவைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும், அரண்மனைகள், இளவரசிகள் என அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் சஞ்சய் லீலா பன்சாலி உடன் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கற்றக்கொள்ளவும், பாலிவுட் சந்தை குறித்து தெரிந்து கொள்ளவும் முடிந்தால் அது எனக்கு ஒரு பெருமையாக இருக்கும்.” இவ்வாறு உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.