தலைமைச் செயலகத்திற்குள் புகுந்த விவசாயிகள் ; மாடியிலிருந்து குதித்து போராட்டம்.. உச்சகட்ட பரபரப்பு!

மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நகர்புற மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்திராலயம் முன்பு 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் தலைமைச் செயலகத்தின் உள்ளே புகுந்தும் போராட்டம் நடத்த தொடங்கினர்.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்த அவர்களை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயிகள் சிலர் தலைமைச் செயலக மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தனர். பின்னல் வலை அமைக்கப்பட்டிருந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

உடனடியாக வலைக்குள் இறங்கிய போலீசார் விவசாயிகளை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். விவசாயிகள் வராமல் தரையில் படுத்துக்கொண்டு முரண்டு பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஒரு வழியாக அவர்களை கைது செய்த காவல்துறையினர் தலைமைச் செயலகத்தில் இருந்து மரைன் டிரைவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் அமைச்சர் தாதாஜி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரம் முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ரோஹித் பவார், “விவசாயிகள் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு அவர்களின் குரலை அரசாங்கம் கேட்டிருந்தால், இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது. மந்த்ராலயாவில் இதுபோன்ற போராட்டம் நடத்துவது சரியல்ல என்ற போதிலும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “நான் விவசாயிகளை இன்று சந்திக்க அழைத்திருந்தேன். அவர்கள் அமைச்சர் தாதாஜியை சந்தித்துப் பேசியுள்ளனர். விவசாயிகள் பிரச்னை குறித்து 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.