நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போகவில்லை..? வகுப்பறையில் வரம்புமீறி பேசிய ஆசிரியை

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், இஸ்லாமிய மாணவர் ஒருவரை, சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சிறுவனுடைய மதத்தைக் குறிப்பிட்டு தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தவறு செய்ததாக அந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார். அதேசமயம், மதரீதியான எந்த நோக்கமும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவர், இஸ்லாமிய மாணவர்களிடம், நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போகவில்லை? என கேள்வி எழுப்பியிருக்கிறார். மதரீதியாகவும் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற கருத்துக்கள் பள்ளியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அனில் குமார் பாஜ்பாய் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.