சென்னை, ‘அடுத்த, 15 நாட்களுக்கு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்’ என கர்நாடகா அரசுக்கு, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சுப்பிரமணியன் பேசியதாவது:
டெல்டா மாவட்டங்களில் நீரின்றி குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. சம்பா நடவு பணிகளை துவங்க முடியவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய 9 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும். இது மட்டுமின்றி அடுத்த 15 நாட்களுக்கு, 8 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், ‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் நிலவுகிறது’ என, தெரிவித்தனர்.
இதையடுத்து, ‘அடுத்த 15 நாட்களுக்கு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்’ என கர்நாடகா அரசுக்கு, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகாவில் போதிய மழை பெய்யவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, தண்ணீர் வரத்து அதிகாரித்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். இப்போதைக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது’ என, தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவாதிக்க, பெங்களூரு விதான் சவுதாவில் இன்று பகல் 12:30 மணிக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement