லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டிலுள்ள சாவோ லாரென்கோ டி பெய்ரோ சிவப்பு நிற ஒயின் ஆறாக ஓடியது.
அடர்ந்த கருப்பு நிற திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படுவது ரெட் ஒயின் (Red Wine). இதன் பெயரில் சிவப்பு இருந்தாலும் முழு சிவப்பாக இருக்காது. ஊதா பழுப்பு செங்கல் சிவப்பு கலரில் இருக்கும்.
இந்நிலையில் வீடியோ ஒன்றில் ரோடுகளில் ரெட் ஒயின் ஆறாக ஓடுவது வைரலானது. இதை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுரசித்தனர். போர்ச்சுகல் நாட்டிலுள்ள சாவோ லாரென்கோ டி பெய்ரோ என்ற சிறு கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கு 2000 பேர் வசிக்கின்றனர்.
செப். 10 இரு பெரிய கண்டெய்னர்களில் ரெட் ஒயினை நிரப்பி கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த வாகனங்கள் வெடித்து சேதமடைந்ததில் ரெட் ஒயின் முழுவதும் வெளியேறி ரோடுகளில் ஆறாக ஓடியது. 2.2 மில்லியன் லிட்டர் ஒயின் ஆறாக ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த ஒயினையும் ஒலிம்பிக் விளையாட்டில் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் கொட்டி நிரப்பி விடும் அளவு இருந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் உடனே போலீஸ் தீயணைப்புத் துறை மற்றும் அரசு நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஒயின் ஆறால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சூழலியல் ரீதியாக பாதிக்கப்படாமலும் நடவடிக்கை எடுத்தனர். அருகில் பாயும் செர்டிமா என்ற ஆற்றில் கலந்து விடாமல் ஒயினை திருப்பி விட்டனர். கடைசியாக அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் ஒயின் போய் சேர்ந்தது. இச்சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட ஒயின் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஒயினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement