வாழைச்சேனையில் மீன் சார்ந்த உற்பத்திகளைத் தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிறைந்துரைச்சேனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய மீன் மாசி மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை விததா வளநிலைய பொறுப்பதிகாரி எஸ். எச். புர்ஹானுதீன் தலைமையிலான தொழிற்பயிற்சி அதிகாரிகள் மீன் மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை மேள்கொள்ளுதல் தொடர்பான தொழில் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் செயன்முறைப் பயிற்சிகளை வழங்கினர்.

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமத்தினால் பிரதேச மாதர் சங்கத்தின் தொழில் திட்டத்திற்கு அவசியமான மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட உதவித்தொகை மாதர் சங்கத் பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது..

அத்துடன் இத்தொழில் முயற்சிக்கான காணி மற்றும் கட்டடம் போன்றவற்றை விரைவில் பெற்றுக்கொடுத்து, பிரதேச மீன் வளத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்கவிருப்பதாக அமைச்சரின் செய்தி முன்வைக்கப்பட்டது.

மேலும் அமைச்சர் நசீர் அஹமதின் சிபாரிசின் அடிப்படையில் “சௌபாக்யா” திட்டத்தினால் இம்மாசி மற்றும் மீன் திட்டத்தின் உற்பத்திக்காக சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களும் இம்மாதர் அமைப்பிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். இர்பான் உட்பட மாதர் சங்க அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.