கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை காவல் நிலையத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரி ஜங்சன் பகுதியில் கடந்த 11-ம் தேதி இரவு 10:30 மணி அளவில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். ஆஸ்பத்திரி ஜங்சன் பகுதியில் பூக்கடை வைத்திருந்த கோபகுமார் என்பவர் கடையை பூட்டிவிட்டு, கடை ஓரம் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது இரவு நேர ரோந்துக்கு வந்து பாறசாலை போலீஸ் ஸ்டேஷன் கிரேடு எஸ்.ஐ கிளாஸ்டன் மத்தியாஸ் அங்கு சென்று, `இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் கூடி நிற்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியாதா’ என கேட்டுள்ளார். அதற்கு கடையை பூட்டிவிட்டு நின்று கொண்டிருப்பதாக கோபகுமார் கூறியிருக்கிறார்.

கோபமான எஸ்.ஐ சத்தமாக கத்தியதுடன் தனது வாகனத்தில் இருந்து லத்தியை எடுத்து கோபகுமாரின் வலது கால் முட்டிக்கு மேல்பகுதியில் இரண்டு முறை பலமாக அடித்துள்ளார். அதை அங்கு நின்ற கோபகுமாரின் நண்பர் அபிலாஸ் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். அதைபார்த்த எஸ்.ஐ செல்போனை பறித்துள்ளார். மேலும் அவர் பாக்கெட்டில் வாங்கி வைத்திருந்த மருந்து பாட்டிலை, பாக்கெட்டில் இருந்து எடுத்து ரோட்டில் போட்டு உடைத்துள்ளார். எஸ்.ஐ-யின் செயலுக்கு அங்கு நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அடுத்து எஸ்.ஐ-யை அவருடன் வந்த சக போலீஸார் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
கால் முட்டிக்கு மேற்பகுதியில் தோல் கிழிந்த நிலையில் கோபகுமார் பாறசாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். எஸ்.ஐ வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து செல்வதும், லத்தி எடுத்து தாக்குவதும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகிறது. இவற்றை ஆதாரமாகக்கொண்டு கோபகுமார் பாறசாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்த வீடியோ ஆதாரம் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் எஸ்.ஐ மீது வழக்கு பதிவுசெய்ய இன்ஸ்பெக்டர் ஆசாத் அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பணியில் இருந்த எஸ்.ஐ மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு மாவட்ட எஸ்.பி-யிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஆனால், இன்ஸ்பெக்டர் அப்படி அனுமதி பெறவில்லை எனக் கூறி இன்ஸ்பெக்டர் ஆசாத் அப்துல்கலாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாதாரண பிரிவுகளில் போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய தனக்கு அடுத்தகட்டத்தில் உள்ள மேல் அதிகாரிக்கு தெரிவித்தால்போதும் என விதி உள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் இது குறித்து நெயாற்றின்கரை ஏ.எஸ்.பி-க்கு தகவல் தெரிவித்த பின்பே எஸ்.ஐ மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. சொந்த காவல் நிலைய எஸ்.ஐ மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY