"விமர்சனம் மட்டுமே செய்யாதீர்கள்; நல்லதை ஆதரித்தும் எழுதுங்கள்!" – நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டிகள், அவர் எழுதிய கட்டுரைகள், தொடர்கள், அவரின் அரசியல் சாதனைகள் உட்பட அவரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை, `கலைஞர் 100, விகடனும் கலைஞரும்’ என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறது ஆனந்த விகடன். இதன், நூல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

Vikatan Kalaignar 100

இதில் சிறப்பு விருந்தினர்களாக, முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், `தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “தமிழகத்தில் அனைத்து நூலகங்களுக்கும், பல்வேறு பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்கும் நடைமுறை, அதற்கான தேர்வுக்குழு ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது சிறப்பாக இருக்கும். சிறு பதிப்பாளர்களை அரவணைத்து, நல்ல நூல்களை ஆதரித்து, அவற்றை நூலகங்களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்” என்று முதல்வருக்குக் கோரிக்கை வைத்தார்.

Vikatan Kalaignar 100

அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விகடன் குழும நிர்வாக இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒளிவு மறைவின்றி நூல்களை தேர்வுசெய்ய, நிபுணர்கள்கொண்ட தேர்வுக்குழு விரைவில் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆளுமை எனப் பன்முக ஆற்றல்கொண்டவர் கலைஞர். அவரை ஊடகத்துறை பாராட்டுவது பொருத்தமான ஒன்று. அதை விகடன் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய கலைப்பயணம் பற்றி 60 வாரங்கள் கலைஞர் எழுதியிருக்கக்கூடிய துணுக்குகளைப் படித்தாலே, 50 ஆண்டுக்கால சினிமாவை நாம் தெரிந்துகொள்ள முடியும். 1969-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, `தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விகடன் உளமாற விரும்புகிறான்’ என விகடன் தலையங்கம் எழுதியது.

முதல்வர் ஸ்டாலின் – Vikatan Kalaignar 100

1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது `கலைஞரே வருக… கருத்தான ஆட்சி தருக’ என்று தலையங்கம் தீட்டியதும் ஆனந்த விகடன்தான். பத்திரிகையாளர்கள் குழுமியிருக்கும் இந்த மேடையில் ஒன்றைக் கூறுகிறேன். ஓர் ஆட்சி செயல்படுத்திவரக்கூடிய நல்ல திட்டங்களை, மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான் நீங்கள் விமர்சிக்கும்போதும் அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

`கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ——>>> https://bit.ly/3Zpcc0r

எதையும் விமர்சித்து மட்டும் எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பு இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலைப் பத்திரிகை தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக அல்ல, இந்த நாட்டுக்காக, மக்களுக்காக. ஏனென்றால் இந்த ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டிருப்போம். ஆனால், அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைகளும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் – Vikatan Kalaignar 100

தி இந்து, ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தவை. 1942-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆனந்த விகடன் நெருக்கடிக்குள்ளானது. `அடக்குமுறை நீண்ட நாள் தலைவிரித்தாட முடியாது’ என்று அப்போது ஆனந்த விகடன் தலையங்கம் தீட்டியது. `இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று சொல்வது ஆட்சேபகரமானது என்றால், விகடனும் குற்றவாளிதான்’ எனத் துணிச்சலாக விகடன் தலையங்கம் எழுதியது.

முதல்வர் ஸ்டாலின் – Vikatan Kalaignar 100

கடந்த ஏப்ரலில் `ஒன்றிய அரசு அமல்படுத்தியிருக்கும் தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் 2023, மோசமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது. விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெரிப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல’ என்று விகடன் தலையங்கம் கூறியிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. விகடன் சொல்லியிருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைத்தான் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்று சொல்கிறேன். நான் அரசியல் பேசவில்லை, ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறேன். ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகைத்துறைகள் எதிர்காலத்தில் இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.