கண்ணுார், ‘கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறிய, தீண்டாமை கொடுமை குற்றச்சாட்டில், சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கோவில்களில் எந்தவொரு தனிமனிதரும், ஜாதி பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை’ என, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கண்ணுார் மாவட்டத்தின் பையனுாரில் சில மாதங்களுக்கு முன் நடந்த கோவில் விழாவில், தனக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்ததாக, மாநில பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
அந்த விழாவில், தனக்கு முன் குத்து விளக்கு ஏற்ற வந்த இரு அர்ச்சகர்கள், விளக்கை ஏற்றிவிட்டு, அவர்கள் கையில் இருந்த சிறிய தீபத்தை நேரடியாக தன் கையில் கொடுக்காமல், கீழே வைத்துச் சென்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோவில் நிகழ்ச்சியில் தனக்கு தீண்டாமை கொடுமை நடந்ததாக குற்றஞ்சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி உட்பட, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களும் குரல் கொடுத்தனர். ‘தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பான, அகில கேரள தந்திரி சமாஜம் விளக்கம் அளித்துள்ளது.
அதன் விபரம்:
கோவில்களில் தேவ பூஜை செய்யும் தந்திரிகள் எனப்படும் பாரம்பரிய அர்ச்சகர்கள், அந்த பூஜை முடியும் வரை யாரையும் தொட மாட்டார்கள். அதில், பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.
இந்த விழாவின் போது, கோவிலின் மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, கோவில் தந்திரி வராததால், கடைசி நேரத்தில் குத்து விளக்கு ஏற்ற வரும்படி மேல்சாந்தி அழைக்கப்பட்டார்.
மேடைக்கு வந்த அவர், குத்துவிளக்கு ஏற்றிவிட்டு பூஜையை தொடர வேண்டி இருந்ததால், சிறிய தீபத்தை நேரடியாக அமைச்சர் கையில் கொடுக்காமல் கீழே வைத்துள்ளார்.
மற்றபடி ஜாதி அடிப்படையிலான தீண்டாமை நோக்கம் இல்லை. இந்த குற்றச்சாட்டில் சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.
கோவில்களில் எந்தவொரு மனிதருக்கும் எதிராக ஜாதி அடிப்படையில் பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை.
மேலும், இந்த விழா நடந்து முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்த பிரச்னையை பெரிதாக்குவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்