புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான வெறுப்பு குற்றச்சாட்டு வன்முறைகளை கருத்தில் கொண்டு அங்கு வாழும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். அங்கு பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் முன்னெச்சரிக்கை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கனடாவிலிருந்து இந்திய தூதரை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் அங்கு அத்தியாவசியமில்லாத பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள பல குழுக்கள் நமக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதற்காக கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் எப்போதும் தொடர்பில் இருக்கும்.
விரும்பத்தகாத நிகழ்வுகளின் சூழ்நிலைகளின்போது ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். வலைதளங்கள் மூலமாகவும் கனடாவாழ் இந்தியர்கள் உதவி கோரலாம்.
இவ்வாறு மத்திய வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனடா அரசு செவ்வாய்க்கிழமை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை நேற்று வழங்கியுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதில் ‘‘இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு’’ தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மிகவம் கசப்பானதாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.