பெங்களூரு, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து, பெங்களூரு உட்பட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு, அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு, 5,000 கன அடி நீர் திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனால், கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது.
சாலை மறியல்
உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம், சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா, சாம்ராஜ் நகர், மைசூரின் டி.நரசிபுரா, பெங்களூரு உட்பட பல பகுதிகளில் நேற்று பல அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரைப்பட நடிகர்கள் உட்பட, பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு முன் காவிரி பிரச்னையின் போது, தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காதவாறு, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
‘தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவுக்குள் நுழையும் பஸ்கள், வாகனங்கள் மீது கல் வீச்சு நடக்கும் அபாயம் உள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதி களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.
‘தியேட்டர்கள், மல்ட்டி பிளக்ஸ்களில் தமிழ் படங்கள் திரையிடுவதை கண்டித்து, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்’ என, உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, முன்னெச்சரிக்கையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
இதன்படி, சிவாஜிநகர், ஹலசூரு, ஸ்ரீராம புரம், ராஜாஜிநகர், மாகடி சாலை, நாயண்டஹள்ளி, யஷ்வந்த்பூர், டேனரி சாலை, பொம்மனஹள்ளி, கே.ஆர்.மார்க்கெட், சாம்ராஜ்பேட், கலாசிபாளையா, கே.ஆர்.புரம், கே.ஜி.ஹள்ளி, டி.ஜெ.ஹள்ளி, ஜெ.சி.நகர், மடிவாளா, பி.டி.எம்., லே அவுட், ஜெயநகர் உட்பட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.பி.,க்கள் வீடு முற்றுகை
இன்று மாண்டியாவில், ‘பந்த்’ நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், எம்.பி.,க்கள் வீடுகள், அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கன்னட ரக் ஷனா வேதிகே அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்