வாஷிங்டன்,-”இந்தியாவோடு கனடா மோதுவது என்பது, யானையை சண்டைக்கு வம்பிழுக்கும் எறும்பு போல உள்ளது,” என, அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரியான மைக்கேல் ரூபின் கருத்து தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கும், இந்திய துாதரகத்துக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில், புதுடில்லியில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க வந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடி கடுமையுடன் குறிப்பிட்டார்.
இதை எதிர்பாராத ஜஸ்டின் ட்ரூடோ, சமீபத்தில் அந்த நாட்டின் பார்லிமென்டில் பேசும்போது, ‘நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசின் ஏஜன்டுகளுக்கு தொடர்பு உள்ளது’ என, குறிப்பிட்டார். இது பெரும் விவகாரமாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரியான மைக்கேல் ரூபின் கூறியுள்ளதாவது:
இந்த விஷயத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தவறான முடிவுகளை எடுத்துள்ளார். இது இந்தியாவை விட, கனடாவுக்கு மிகப்பெரும் அபாயத்தையே ஏற்படுத்தும்.
இரு நாடுகளுமே அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும். இரண்டில் ஒருவருக்கு ஆதரவு என்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவுக்கே அமெரிக்கா ஆதரவு தரும். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை சமாளிப்பது உட்பட பல விஷயங்களில் இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்கு தேவை.
மேலும், தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது, ஜஸ்டின் ட்ரூடோ நீண்ட நாள் அந்தப் பதவியில் இருக்க மாட்டார். அதனால், புதியவர் வந்தபின் சமரசம் செய்யலாம் என, அமெரிக்கா கருதும்.
நிஜ்ஜாரை, ஒரு பிளம்பர் என்று ட்ரூடோ கூறியுள்ளார். அப்படியானால், ஒசாமா பின் லேடனை, சிவில் இன்ஜினியர் என்று கூற முடியுமா? நிஜ்ஜார் கைகளில் ரத்தக் கறை உள்ளது. பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.
மனித உரிமை என்று இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ளவும் முடியாது. பயங்கரவாதிக்கு எதிராக மனித உரிமையை பார்க்க முடியாது. அவர் என்ன அன்னை தெரசாவா?
இந்தியாவுக்கு எதிராக, தான் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் கனடா இதுவரை ஒரு துளி ஆதாரத்தைகூட காட்டவில்லை.
ஏதோ உள்நாட்டு அரசியலுக்காக, சில நெருக்கடிகளால், தொலைநோக்கு பார்வையில்லாமல், கண்மூடித்தனமாக இந்தப் புகாரை அவர் கூறியுள்ளதாகவே தெரிகிறது. ஒரு அரசியல்வாதியாகவே ட்ரூடோ நடந்து கொண்டுள்ளார்; ஒரு நாட்டின் தலைவராக அல்ல.
கனடாவின் தற்போதைய இந்த முயற்சிகள், ஒரு பெரிய யானையை, ஒரு சிறிய எறும்பு சண்டைக்கு வரும்படி வம்பு இழுப்பது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சதி செய்த நிஜ்ஜார்
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிஜ்ஜார், பாகிஸ்தானுக்கு சென்று ஆயுத பயிற்சி பெற்றவர். காலிஸ்தான் அமைப்புக்காக கனடாவில் இருந்தபடியே நிதி திரட்டியவர். இந்தியாவில் பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல் நடத்த, காலிஸ்தான் அமைப்பினருடன் சேர்ந்து சதி செய்தவர். இந்த பயங்கரவாதியை, மத போதகர் போல் கனடா அரசு சித்தரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதியின் சொத்து பறிமுதல்
கனடாவை மையமாக வைத்து செயல்படும், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற பிரிவினைவாத அமைப்பு, நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர், இதன் தலைவராக உள்ளார்.சமீபத்தில், ‘கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் அனைவரும் தப்பி இந்தியாவுக்கு ஓடி விடுங்கள். இல்லையெனில் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்’ என, அவர் மிரட்டல் விடுத்தார்.இந்த ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்பத்வந்த் சிங்கின் வீடு மற்றும் நிலத்தை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சொன்னதையே சொல்லும் ட்ரூடோ
காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நிஜ்ஜார் விவகாரத்தில், இந்திய ஏஜன்டுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.’இது அபத்தமானது, உள்நோக்கம் உடையது’ என, மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுகளை ட்ரூடோ முன்வைத்து வருகிறார்.டொரன்டோவில் நேற்று அளித்த பேட்டியில் ட்ரூடோ கூறியுள்ளதாவது:நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய அரசுக்கு பல வாரங்களுக்கு முன்பே ஆதாரங்களை அளித்துள்ளோம். வலுவான ஆதாரங்களை நாங்கள் அளித்துள்ளோம். இந்த கொலை விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய ஆக்கப்பூர்வமான உதவியை அளிக்கும்படி இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்