தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக இன்று 50,000 தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் தமிழக அரசு நிலைக்கட்டணத்தை ஒரு கிலோவாட்டிற்கு 35 ரூபாயில் இருந்து 154 ரூபாயாக உயர்த்தியது. அதேபோல வேலை அதிகமாக செய்யப்படும் 8 மணி நேர பீக் ஹவர் கட்டணத்தை 15 சதவிகிதம் உயர்த்தியது.

பல தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், கோரிக்கைகள் சம்பந்தமான எந்தவித அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இது தொழில் நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தொழிற்சங்க தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “50,000 நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட 1.2 கோடி ஊழியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட சுமார் மூன்று கோடி தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கும் முன், தொழில்துறை பிரதிநிதிகளுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தவில்லை. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்கள் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு அதிக மின் கட்டணத்தை விதித்து தொழில் நிறுவனங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TEAMA) தலைவர் எம்.பி. முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறைந்த ஆர்டர் மற்றும் தொழிலாளர் பிரச்னை காரணமாக ஆடைத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக வசூலிக்கப்படும் பீக் ஹவர் கட்டணங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் சிறு தொழில்களை முடக்கி வருகின்றன’’ என தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு குறித்து மனம் வருந்தியுள்ள ஒரு தொழிலதிபர், “ஒரு காலத்தில் தொழில் செய்ய கவர்ச்சிகரமான இடமாக இருந்த மாநிலம், மெல்ல மெல்ல எங்களுக்கு ஒரு தனி நபராக தோற்றமளிக்கிறது. மேலும் சிறந்த வாய்ப்புகளுக்காக மற்ற மாநிலங்களைத் தேட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
`இந்திய தொழில் வர்த்தக சபை’, `தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம்’, `தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம்’ உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த 165 தொழிற்சங்கங்கள் மின் கட்டணத் திருத்தத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?!