திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியது தொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் கோட்டத் தலைவர் ஆகியோர் இன்று (செப்.25) கைது செய்யப்பட்டனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் 3-வது நாளில் இருந்து 5-ம் நாள் வரை, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், செய்யாறு, வந்தவாசி, போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட ஊர்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை இந்து முன்னணியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்து பேசினர்.
ஆரணியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்து வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் பேசினார். அப்போது அவர், முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை அவதூறாகவும் மற்றும் மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆரணி நகராட்சித் தலைவர் ஏ.சி.மணி நேற்று கொடுத்த புகாரின் பேரில் மத உணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு கெடு விளைவித்தல், தனி நபர்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இருந்த கோட்டத் தலைவர் மகேஷை இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை, திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையறிந்த இந்து முன்னணியினர், சந்தவாசல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி, விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதேபோல், செய்யாறில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாநில செயலாளர் மணலி மனோகர் பேசினார். அப்போது அவர், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இது குறித்து நகர திமுக செயலாளர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சென்னை மணலியில் உள்ள வீட்டில் இருந்த மாநிலச் செயலாளர் மணலி மனோகரை இன்று கைது செய்தனர். பின்னர் அவரை, செய்யாறு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், மாநிலச் செயலாளர் மணலி மனோகர் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், செய்யாறில் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.