வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் 2046ல் இந்தியாவில் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட, முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் – இந்தியா, சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதியோர் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசின் மக்கள்தொகைக் கணிப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் உலக மக்கள் தொகை வாய்ப்புகள் 2022 ஆகியவற்றின் சமீபத்திய தரவுகளை பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 41 சதவீதம் வரை இந்த உயர்வு உள்ளது. 2050க்குள் இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள். வரும் 2046ல் இந்தியாவில் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்திய முதியவர்களில் 40 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். 18.7 சதவீதம் பேர் எவ்வித வருமானமும் இன்றி வாழ்கிறார்கள். இது முதியவர்களின் வாழ்க்கைத் தரத்திலும், அவர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2022 மற்றும் 2050க்கு இடையே 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 279 சதவீதம் உயரும். விதவைகள், மற்றவர்களை சார்ந்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement