சென்னை: இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி பசுமைப் புரட்சியை
ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் துறையினருக்கும், வேளாண் மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உலக அளவில் பெருமை பெற்றவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவருமான, இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது முதிர்வால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பேரன்பைப் பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன், மத்திய திட்டக் குழு துணைத் தலைவர், திட்டக் குழு உறுப்பினர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்ததோடு; `பத்மபூஷன்’, `எஸ்.எஸ். பட்நாகர்’, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் `மகசேசே’ விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் `வால்வோ’ உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளையும் பெற்ற போற்றுதலுக்குரியவர்.
இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி பசுமைப் புரட்சியை
ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் துறையினருக்கும், வேளாண் மக்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11.20 மணி அளவில் உயிர் இழந்தார். அவருக்கு வயது 98. சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே உயிரிழந்துவிட்டார். | வாசிக்க > வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்