ஐசிசி உலகக் கோப்பை 2023 இந்திய அணி: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கான கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் உலகக் கோப்பைக்கான தற்காலிக அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்கான இறுதி வீரர்கள் பட்டியலை குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. இன்றைக்கு பிறகு உலகக் கோப்பை அணியில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ள விரும்பினால், ஐசிசி-யின் ஒப்புதல் பெற வேண்டும்.
அக்சர் படேல் காயம்
காயத்தால் பாதிக்கப்பட்ட அக்சர் படேலைத் தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குவாட்ரைசெப்ஸ் ஸ்ட்ரெய்ன் காரணமாக அக்சர் படேல் (Axar Patel) தற்போது இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கூட அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றிருந்தார்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது பயணத்தை தொடங்குவதற்கு முன்பு அக்சர் படேல் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டம் அனைவரின் கவனத்தை பெற்றிருப்பதால், யாரை தேர்ந்தெடுப்பது என தேர்வாளர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம்.
ஆனால் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனத் தெரிகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பையில் அக்சர் படேல் காயம் அடைந்தது மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) சிறப்பாக செயல்பட்டதும் வைத்து பார்த்தால், ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா என்று அணி நிர்வாகம் யோசிக்கலாம்.
ICC World Cup 2023: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடர் என்பது அனைத்து அணிகளுக்கும் மிக முக்கியமானது. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் அணி 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதன் அடிப்படையில், அக்சர் படேலுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து உலகக் கோப்பை தொடர் முழுவதும் முழு உடற்தகுதியுடன் இருப்பாரா? இல்லை இடையில் மீண்டும் ஏதாவது பிரச்சனை வருமா? என்ற கோணத்தில் அணி நிர்வாகம் ஆலோசனை செய்யும். அதில் அக்சர் படேல் உடற்தகுதி ஏதேனும் சந்தேகம் இருந்தால் அஸ்வின் உலகக் கோப்பை 2023 தொடரில் களமிறங்கலாம்.
உலகக் கோப்பை 2023: முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி
World Cup Squad 2023: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது ஷமி சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ்.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடர்: அக்டோபர் 5 ஆம் தேதி ஆரம்பம்
இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்ட உலகக் கோப்பை அட்டவணை படி, அக்டோபர் 5 ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போட்டியுடன் உலகக் கோப்பை தொடர் தொடங்கும். இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.