வெப்பநிலை உயர்வு | பிரேசிலில் ஒரே வாரத்தில் நூறு டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நூறுக்கும் அதிகமான டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

பிரேசில் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள டெஃபே ஏரி, டால்ஃபின் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஏராளமான மீன்களுக்கும் முக்கிய வாழ்விடமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், டெஃபே ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் 39 டிகிரியை கடந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரே வாரத்தில் டெஃபே ஏரியில் நூறுக்கும் அதிகமான டால்ஃபின்களும், ஆயிரக்கணக்கான மீன்களும் இறந்துள்ளதாக, பிரேசில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆராய்ச்சிக் குழுவின் ஒரு அங்கமாக செயல்படும் மமிராவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு காணொலியில், இறந்து கரை ஒதுங்கிய டால்ஃபின்களை பிணந்தின்னி கழுகுகள் கொத்தித் தின்னும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்.02) ஒரே நாளில் இரண்டு டால்ஃபின்கள் இறந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டால்ஃபின்களின் இறப்புக்கு வெப்பநிலை உயர்வே காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்பநிலை மேலும் உயர்ந்தால் டால்ஃபின் இறப்பு மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

டால்ஃபின்கள் மற்றும் மீன்களின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்வாழ் பாலூட்டி நிபுணர்கள் அடங்கிய குழுக்களை பிரேசில் அரசாங்கம் அமேசான் மழைக்காடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்னொருபுறம், அதிக வெப்பநிலை காரணமாக, டெஃபே நகரில் உள்ள நதியின் தண்ணீர் அளவு கடுமையாக குறைந்ததால் அங்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக டெஃபே நகர மேயர் நிக்சன் மர்ரீரா கவலை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.