கோவை: “மதச்சார்பின்மையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்.4) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தெலங்கானா மாநிலம் நிஜாமாபாதில் நேற்று (அக்.3) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை’ என்று பேசியிருக்கிறார்.
தமிழக இந்துக்களின் மிக முக்கியமான பிரச்சினை குறித்து, அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பிரதமர் பதிவு செய்திருக்கிறார். இதனால், யாரும் கண்டுகொள்ளாத தமிழக இந்துக்களின் பிரச்சினை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. மதச்சார்பற்ற அரசுக்கு மத விவகாரங்களில், கோயில் நிர்வாகங்களில் தலையிட உரிமை இல்லை.
அதிக வருமானம், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை. கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகை வந்தாலே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போல ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மருத்துவமனை, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு மேல்நிலைப் பள்ளியை நடத்த முடியும்.
ஆனால், கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகையை வசூலிக்கவோ, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவோ, கோயில்களை நிர்வகிக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில்களை, இந்து மதத்தை, பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். எனவே, மதச்சார்பின்மையை காக்க, இந்து கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.