`அதிகாரிகளுக்கே அதிகாரம்; மக்களுக்கு இல்லை!' ஶ்ரீவில்லிபுத்தூர் கிராம சபை விவகாரம் சொல்லும் உண்மை!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் கிராம ஊராட்சியில், அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கேள்வி கேட்க முயன்ற அம்மையப்பன் என்ற விவசாயியை, அந்த ஊராட்சியின் செயலர் தங்கபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதத் தன்மையற்ற இந்தச் செயலுக்கு தன்னாட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் இரா. வினோத்குமார் பேசும்போது,

காலால் உதைத்தல்

”இச்சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயியின் புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல்களை வரவேற்கலாம். எனினும், நிர்வாக ரீதியில் பெரும்பாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே தரப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்களின் தொடர் முயற்சியால், கிராமசபையில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதும் பொறுப்பிலுள்ளவர்களின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதும் நிகழத் தொடங்கியுள்ளன. இதை அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகக் கருதாமல், தங்களின் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் மனநிலை பல அலுவலர்களிடமும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடே, பிள்ளையார்குளத்தில் அரங்கேறியுள்ள தாக்குதல் சம்பவம்.

கிராம சபை

கிராமசபை, உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு சபை. கிராம ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கக் கூடிய, கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகாரம் ஊராட்சியின் வாக்காளர்களான கிராமசபையின் உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ, யாருக்காகப் பணி செய்ய வேண்டுமோ அவர்களையே கிள்ளுக் கீரையாக நினைக்கும் போக்கே பெரும்பாலும் துறை அலுவலர்களிடம் உள்ளது.

சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு வெளியான தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் – 2023 (அரசாணை 113, ஊ.வ.ஊ.துறை, நாள் 13.09.2023), ஊராட்சி செயலரைத் தண்டிக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றத்தையோ கிராமசபையையோ அதிகாரப்படுத்தாமல், இப்படித் துறை அலுவலர்களை அதிகாரப்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்களால்தான் அவர்களுக்குத் தாங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்பட்டவர்களல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது..

கிராம சபை

மேலும், ஊராட்சியின் கடைநிலை அலுவலரான ஊராட்சி செயலாளர், ஒரு கிராமசபை உறுப்பினரை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை அலுவலர்கள் இருக்கும்போதே தாக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத் திமிரும் தைரியமும் காலனிய ஆதிக்க மனநிலையை இன்னமும் கைவிடாத பொது நிர்வாகத்திலிருந்தே கிடைக்கின்றன. இந்தியப் பொது நிர்வாகத்தை (Public Administration) முழுமையான சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

இந்தப் பின்னணியில் தன்னாட்சி, தமிழ்நாடு அரசுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

கிராமசபை

1. பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்குவதோடு, அவருக்கு இழப்பீடாகக் கணிசமான ஒரு தொகையை, தொடர்புடைய ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.

2. தன்னுடைய புகார் மனுவில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் அம்மையப்பன் தெரிவித்துள்ளதாலும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துள்ள அவரை ஊராட்சி செயலர் மார்பில் கடுமையாக எட்டி உதைத்தாலும், இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) (இறப்பை அல்லது கடுங்காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) சேர்க்கப்பட வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட விவசாயி, ஊராட்சி செயலர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டதாக வெளியான காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.

4. அனைவர் முன்னிலையிலும் ஒரு மனிதரை இழிவுபடுத்தும் விதமாக காலால் எட்டி உதைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே, உரிய விசாரணக்குப் பிறகு, அந்த செயலாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிக்கின்ற மற்ற அலுவலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

கிராமசபை கூட்டத்தில்

5. மேலும், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

6. கிராம சபை எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதில் தலைவர், ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை உறுப்பினர்கள் போன்றோரின் பங்கு என்ன என்பது போன்ற சட்ட ரீதியான விழிப்புணர்வு விளம்பரங்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.

7. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராமசபைகளும் காணொளி பதிவு செய்யப்பட்டு, அரசின் இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்பட வேண்டும்.

8. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106-ல் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் (G.O (Ms.) No. 113, dated 13.09.2023) ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தண்டிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றத்திற்கோ அல்லது கிராம சபைக்கோ வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.