கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இப்பரீட்சைக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாது போன விண்ணப்பதாரிகளுக்காக 2023.10.06 தொடக்கம் 2023.10.10 வரை மேலும் 3நாட்கள் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அறிவித்தார்.
.
அவ்விண்ணப்பதாரிகள் www.doenets.lk இணையத்தளத்தில் நிகழ்நிலை (Online) ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
உயர் தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை எதிர்வரும் சில தினங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்ட கல்வி அமைச்சர், ஆரம்பத் தரத்திற்கு ஜனவரி 2ஆம் திகதியும், பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் ஏனைய தரங்களுக்காகவும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.