கட்டணம் தந்து முதலீட்டு ஆலோசனை பெறுவதே சரி!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்று சொல்லப்படும் எஸ்.எம்.இ நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்தில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அமைப்பு அறிமுகம் செய்திருக்கும் கூடுதல் கண்காணிப்பு விதிகளை நாம் நிச்சயம் வரவேற்கலாம்.

காரணம், சமீபத்தில் ஐ.பி.ஓ வெளியிடப்பட்ட எஸ்.எம்.இ நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளன. இந்த விலையேற்றத்தைப் பார்த்த சிறு முதலீட்டாளர்கள், உடனே அதில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த எஸ்.எம்.இ நிறுவனங்கள் என்ன பிசினஸ் செய்கின்றன, இந்த பிசினஸின் எதிர்காலம் எப்படி இருக்கும், இந்த நிறுவனப் பங்குகள் விலை உயர என்ன காரணம், இந்த விலையேற்றம் எவ்வளவு காலத்துக்குத் தொடரலாம் என்பது பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே பணத்தை முதலீடு செய்யத் தொடங்குவது, சூதாட்டத்துக்கு ஒப்பான செயலாகும். ஆனால், பங்கு முதலீடு என்பது சூதாட்டமல்ல. வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அதில் இறங்கினால், நஷ்டம் நிச்சயம் என்பதே பழுத்த முதலீட்டாளர்களின் நிஜ அனுபவம்.

உண்மை இப்படி இருக்க, சிறு முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர் எந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாம் அல்லது முதலீடு செய்யக் கூடாது என்று ஆராயாமல், யாரோ ‘இலவசமாக’த் தரும் ஆலோசனைகளைக் கேட்டு முதலீடு செய்து வருகிறார்கள். இந்த ‘இலவச’ ஆலோசனைகள் சில சமயம் லாபம் தந்தாலும், பல சமயம் பெருத்த நஷ்டத்தை விளைவித்துவிடுகின்றன. இந்த ஆலோசனைகளை ‘இலவச’மாகப் பெற்றதால், நஷ்டம் வரும்போது அதற்கான முழுப் பொறுப்பையும் சிறு முதலீட்டாளர்களே ஏற்க வேண்டி இருக்கிறது. முதலீட்டு ஆலோசனைகளைக் கட்டணம் கட்டி பெறும்போது முதலீட்டு ஆலோசகரின் ஆழ்ந்த அறிவு மற்றும் அனுபவம் காரணமாக சரியானதொரு வழியைக் காட்ட முடியும். இதனால் முதலீட்டாளர்கள் லாபம் பெறாவிட்டாலும், பெரும் அளவில் நஷ்டம் அடைவதைத் தவிர்க்க முடியும்.

ஆனால், முதலீட்டு ஆலோசனையைக் கட்டணம் கட்டிப் பெறும் நிலை இன்றைக்கு நம் நாட்டில் பல நகரங்களில் வரவில்லை. மும்பை, அகமதாபாத், பெங்களூரு எனச் சில நகரங்களில் மட்டுமே கட்டணம் கட்டி முதலீட்டு ஆலோசனை பெறும் நிலை உள்ளது. மற்ற நகரங்களில் வசிக்கும் சிறு முதலீட் டாளர்கள் ‘இலவசமாகவே’ முதலீட்டு ஆலோசனை பெற விரும்புகின்றனர். நமக்கு உடல்நலம் சரியில்லாதபோது, மருத்துவரை அணுகாமல், மருந்துக் கடை ஊழியரை அணுகி, மருந்து வாங்கி சாப்பிட்டால், நமக்கு வந்த நோய் போகாது. மீண்டும் மருத்துவரை அணுகும் நிலையே ஏற்படும். பங்கு முதலீட்டில் மட்டும் ‘இலவச’ ஆலோசனையைப் பின்பற்றினால் நஷ்டமே வரும்.

இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. எந்தவொரு நிறுவனப் பங்கை வாங்குவதாக இருந்தாலும், முதலீட்டு ஆலோசகரிடம் உரிய கட்டணம் தந்து, கலந்தாலோசித்து, அவர் தரும் ஆலோசனைபடி நடப்பதே லாபத்துக்கு வழிவகுக்கும் என்பதை சிறு முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பிப்பது அவசியத்திலும் அவசியம்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.