மும்பை மஹாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில், எட்டு தளங்களை உடைய ‘ஜெய் பவானி’ அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பற்றிய தீ, கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவியது.
இதையடுத்து, அங்குஇருந்தவர்கள் குடும்பத்தினருடன் அலறியடித்தபடி வெளியேறினர். ஒரு சிலர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.
காயமடைந்த, 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்தில் தரை தளத்தில் இயங்கி வந்த கடைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், தேக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் உள்ளிட்டவை கருகின.
இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகர் கூறுகையில், ”கடந்த 2006ல் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், தீயணைக்கும் வசதி இங்கு இல்லை.
”பழைய மாடல் ‘லிப்ட்’ என்பதால், அதில் புகை சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கடும் சிரமத்துக்கு இடையே தீ கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்பட்டனர்,” என்றார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்