
‛அயலான்' படம் குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தாது – சிவகார்த்திகேயன்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
முன்னதாக நேற்று படத்தின் டீசர் வெளியானது. இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், ‛‛தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் விஎப்எக்ஸ் பணிகள் முடியாததால் பொங்கலுக்கு வெளியிடுகிறோம். ரவிக்குமார் தமிழ் வழியில் கல்வி படித்தவர். ஆனால் அறிவியலின் பல்வேறு விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார். 95 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார்.
இதற்கு முன்னர் எம்ஜிஆர் இதுபோன்ற ஏலியன் வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்தார். அவருக்கு பின் இப்போது நாம் தான் அதுமாதிரி படம் எடுத்துள்ளோம் என்று முத்துராஜ் சொன்னார். உடனே எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார் என்று போட்டுவிடாதீர்கள். இது குழந்தைகளுக்கான படம், குழந்தை போன்று மனம் கொண்டவர்ளுக்கான படம். குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தும் படமாக அயலான் இருக்காது. இந்த படத்திற்கு பக்கபலமாய் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இருந்தார்.
பணப்பிரச்னையால் இந்த படம் ஒருமுறை சிக்கியது. அப்போது சம்பளம் வாங்காமல் நான் நடிக்கிறேன் என்றேன். பணத்தை இழந்தாலும் ரவிக்குமார் எனும் சொத்தை சம்பாதித்துள்ளேன். அயலான் பொங்கல் அன்று வருவான் கவருவான்,'' என்றார்.