ஹைதராபாத்: தமிழகத்தைப் பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே தெலங்கானாவிலும் காலையில் அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் நேற்று அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைச்சர் ஹரீஷ் ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவு உண்டார். பின்னர் இத்திட்டம் குறித்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறியதாவது:
சிறப்பு மிகுந்த இத்திட்டத்தை தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மாணவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இத்திட்டத்தின் பொறுப்புகள் நகர்புறங்களில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர்கள், மேயர்களிடமும், கிராமப்புறங்களில் மாவட்ட கூடுதல் ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2,714 அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 23 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறுவர். தினமும் பள்ளி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். உணவு சரியில்லையெனில் மாணவர்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அமைச்சர் ஹரீஷ் தெரிவித்தார்.