LEO Exclusive: "LCU பத்தி விஜய் சார் என்ன சொன்னாருன்னா…" – லோகேஷ் கனகராஜ் சிறப்புப் பேட்டி

தற்போது `லியோ’ திரைப்படம்தான் அனைத்து இடங்களிலும் பரபரப்பான டாக். அதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியைப் பின்வருமாறு பார்க்கலாம்.

“‘லியோ’ படத்தோட கதைக்குள்ள போகும் போது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?”

“படத்தை ஆரம்பிச்சதிலிருந்து கடைசி வரை நம்ம வேலைய சரியா பண்ணனும்ன்னு ஒரு பயம் இருக்கும். இந்தப் படத்துக்கு பூஜைல இருந்து இப்போ சென்சார் வரைக்கும் நாங்க பிளான் பண்ண மாதிரி பண்ணிருக்கோம். துளி கூட குறையல. விஜய் அண்ணா என்கூடஇருந்தாரு. ஈஸியா படத்த முடிச்சிட்டு வெளிய வந்துட்டோம்.”

லோகேஷ் கனகராஜ்

“விஜய் சார்கூட மீண்டும் வேலை பார்த்த அனுபவம் பற்றி…”

“இந்தப் படத்தோட முழு ஸ்கிரிப்ட் கொடுத்ததும் விஜய் அண்ணா கிட்ட ‘மறக்காம சீன் பேப்பர் கொடுத்ததை ஆடியோ லாஞ்ச்ல சொல்லிடுங்க’ன்னு சொன்னேன். அவரும் ‘மறக்காம சொல்லிடுறேன் டா’ன்னு சொன்னாரு. ஆனா, ஆடியோ லாஞ்ச் நடக்காம போயிருச்சு. அவருக்கு சீன் பேப்பர் எல்லாமே கொடுத்துட்டா அவர் மாதிரி கூல் ஆக யாரும் இருக்கமாட்டாங்க. நான் படத்தோட கடைசி ஸ்கிரிப்ட் கொடுத்ததுல இருந்து படத்தோட கடைசி காபி பார்க்குற வரைக்கும் கூட இருந்தாரு. ஆனா அவர் பக்கம் இருந்து ‘எனக்கு இந்த மாதிரி வேணும்’ன்னு எந்தப் பரிந்துரையும் இருந்தது இல்ல. அந்தளவு சுதந்திரம் இருந்தது!”

“‘லியோ’ படத்தோட ரைட்டிங்கிற்கு 5 மாதங்கள் போதுமானதாக இருந்ததா?”

“‘விக்ரம்’ படத்துக்கு முன்னாடி ரஜினி சார்கூட படம் பண்றதுக்கு சைன் பண்ணியிருந்தேன். அதுக்குப் பிறகு லாக்டௌன் வந்திருச்சு. ரஜினி சாரும் அப்போ ‘அண்ணாத்த’ படத்துல பிஸியா இருந்தாரு. அப்போ கமல் சார், ‘நாம படம் பண்ணலாம்’ன்னு சொன்னாரு. அப்போதான் ‘விக்ரம்’ படத்தோட கதைய பண்ணேன். ஆனா, ‘லியோ’ படத்தோட கதைய ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே எழுதிட்டேன். அதுமட்டுமில்லாம, முன்னாடியே ‘லியோ’ படத்துக்கு முழு ஸ்டோரிபோர்டும் வச்சிருந்தோம். இப்போ ரைட்டிங்ல சின்ன சின்ன மாற்றங்கள்தான் பண்ணோம். ஆனா, ‘மாஸ்டர்’ படத்துக்கு அப்படி இல்ல. முதல் பாதி, இரண்டாம் பாதி கதைக்கான ரைட்டிங் வேலையெல்லாம் அப்போதான் பண்ணோம். இரண்டாம் பாதி கிட்டத்தட்ட முடியுற நிலைமைல இருக்கும் போதுதான் ஷூட்டிங் தொடங்கினோம். ஷூட்டிங் போனப் பிறகும் ரைட்டிங் வேலைகளைப் பார்த்தோம்.”

Leo Trailer

“மல்டி ஸ்டாரர் படமாகப் பண்ணனும்னு 5 வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டீங்களா?”

“என்னோட முதல் படமே நான் மல்டி ஸ்டாரர்ராகத்தான் பண்ணேன். அதுலையும் ஶ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி சார், முனீஸ் அண்ணான்னு எல்லோரும் இருப்பாங்க. ‘கைதி’ படத்துலையும் கார்த்தி சார், நரேன் சார்ன்னு எல்லோரும் இருப்பாங்க. ‘மாஸ்டர்’ படத்துல விஜய் அண்ணா, சேது அண்ணா நடிச்சிருந்தாங்க. ‘விக்ரம்’ படமும் அதே மாதிரிதான். இப்போ ‘லியோ’ படமும் அப்படித்தான். இதெல்லாம் நாமளும் முன்னாடியே பண்ணதுதான். ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ படத்துல நிறைய நடிகர்கள் நடிச்சிருப்பாங்க. அந்தப் படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

“‘லியோ’ டைட்டில் எப்படி வந்துச்சு?”

“முன்னாடி, இந்தப் படத்துக்கு ‘ஆண்டனி’ன்னு பெயர் வைக்கலாம்ன்னு இருந்தோம். எனக்கு சவுண்டாக அந்தப் பெயர் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, அந்தச் சமயத்துல அந்தப் பெயர்ல படம் தயாராகிடுச்சு. அதுக்கு பிறகு ‘லியோ’ன்னு வைக்கலாம்ன்னு யோசிச்சோம். சிங்கத்தோட பெயரும்கூட ‘லியோ’. யாரும் யூஸ் பண்ணது இல்ல. ஷார்ட்டான பெயர். அதான் ‘லியோ’ பெயரை வச்சோம்.”

Vijay with Lokesh Kanagaraj

“‘LCU’ பத்தி விஜய் சார் எதாச்சும் சொல்லுவாரா?”

“ஷூட்டிங்குல சினிமா பத்திதான் அதிகமா பேசுவோம். அதை வச்சு கிண்டல் பண்ணியிருக்காரு. ‘LCU’ங்கிற பெயர் ரசிகர்கள் வச்சதுதான். அதை நான் எடுத்துக்கிட்டேன். விஜய் அண்ணா சோஷியல் மீடியால போடுற மாதிரி ‘லோகிண்ணா, லோகிண்ணா’ன்னு கூப்பிடுவாரு. இது மாதிரி ஷூட்டிங் ஸ்பாட் எப்பவும் ஜாலியாக இருக்கும்.”

“சஞ்சய் தத் சார் உங்களைத் தன்னோட பையன்ன்னு சொல்லிப் பதிவிட்டாரே…”

“அவர் ரொம்ப ஸ்வீட்டான நபர். படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு வாரத்துல பையன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. அவரும் அப்பான்னு கூப்பிடச் சொன்னாரு. இப்போ நான் 2, 3 நாள் போன் பண்ணலைன்னா, எனக்கு மெசேஜ் பண்ணிடுவாரு. அவருக்கு தமிழ் பேசி நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசை. அதுக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் மாலை பொழுதுல அவருக்குத் தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுப்போம்.

அவரும் டிரெய்லர் பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு. கடைசி காட்சிகளோட ஷூட்டிங் நடக்கும் போது என்னோட அப்பாவை அவர் பார்க்கணும்ன்னு சொன்னாரு. அதுக்காக அவரை ஊர்ல இருந்து வரவெச்சேன். அவங்க ரெண்டு பேரும் பேசுனாங்க. எங்க அப்பாக்கு இந்தி தெரியாது, சஞ்சய் தத் சாருக்குத் தமிழ் தெரியாது. ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்புக்கு ஒரு நபரை உட்கார வச்சு பேசுனாங்க.”

“பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் கதாபாத்திரங்களைப் பத்தி…”

“கெளதம் மேனன் சாருக்கு ஒரு ஜோடி வேணும்ன்னு யோசிச்சோம். பிரியா ஆனந்த் இந்தக் கதாபாத்திரத்துல பண்ணா நல்லா இருக்கும்ன்னு யோசிச்சோம். ‘விக்ரம்’ படத்துல மருமகள் கதாபாத்திரத்துக்கு பிரியா ஆனந்த்தான் முதல்ல நடிக்கிறதாக இருந்தாங்க. மேத்யூ தாமஸோட பெர்பாமென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாண்டி மாஸ்டருக்குள்ள ஒரு நடிகர் இருக்கார்ன்னு எனக்கு ‘விக்ரம்’ படத்தோட சமயத்துலேயே தெரியும். அப்போவே ‘என்னோட அடுத்த படத்துல நடிக்கணும்’ன்னு சொல்லியிருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு சாண்டி மாஸ்டர் பிஸியான நடிகராக மாறிடுவார். அவர் மட்டும் இதுல தனியா தெரிவார்!”

அன்பறிவ் மாஸ்டர்

“நீங்களும் அனிருத்தும் அன்பறிவ் மாஸ்டர் டைரக்‌ஷன்ல நடிக்கிறதாக பேச்சு வந்தது. அது உண்மையா?”

“அன்பறிவ் மாஸ்டர் கேட்டாங்க. என்னால மறுக்க முடியல. அவுங்க எனக்கு அண்ணன் மாதிரி. எனக்கு ஆக்‌ஷன்தான் பிடிக்கும். அவுங்க ஆக்‌ஷன் டைரக்டர்ஸ். சரி பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. எனக்கு முதல்ல நடிக்கனும்ன்னு ஆசை வரல. அப்படி ஆசை வந்துருந்தா நானே எழுதி நடிச்சிருப்பேனே! அடுத்து நானும் படங்கள் பண்றேன். அனிருத்தும் பல படங்கள் பண்ணிட்டு இருக்காரு. அன்பறிவ் மாஸ்டர்ஸும் பல மொழிப் படங்கள்ல வேலைப் பார்த்துட்டு இருக்காங்க. இப்போ ரெண்டு வருஷத்துக்கு அதை பத்தி யோசிக்கிறதுக்கு கூட யாருக்குமே டைம் இல்ல!”

“டிரெய்லர்ல அந்தத் தகாத வார்த்தைப் பேசினது பத்தி சமூக வலைதளங்கள்ல விவாதமாகப் பேசிட்டு இருக்காங்க… அதை பத்தி..?”

“அந்த சமயத்துல அந்த எமோஷனுக்கு அது சரியா இருக்கும்ன்னு யோசிச்சேன். விஜய் அண்ணா எப்பவும் எதுவும் கேட்க மாட்டாரு. அந்த டைலாக் சமயத்துல, ‘இது பேசலாமா, சரியா இருக்குமா’ன்னு கேட்டார். நான்தான் அவரைப் பேச வச்சேன். அதுக்கு பொறுப்பு நான்தான் ஏத்துக்கனும். அந்த வசனத்தை நடிகர் விஜய் சார் பேசல. பார்த்திபன் கதாபாத்திரம் அதைப் பேசியது. ஒரு படத்தை ரியலாகப் பண்றதுக்கு வேறு என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்? அதுக்குன்னு நான் கெட்ட வார்த்தை பேசுறது சரின்னு சொல்லல. ஒரு கதாபாத்திரம் தன்னோட கோபம், விரக்தி எல்லை மீறிப் போகும் போது வர்ற வெளிபாடுதான் அது. டிரெய்லர்ல கத்துற சீனுக்கும் அடுத்த லீட் காட்சிக்கும் இடையில எனக்கு இது தேவைப்ப்பட்டது.”

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.