பா.இரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவான ‘தங்கலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் மும்முரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. படத்தை முடித்துக் கொடுத்த திருப்தியில் இருக்கிறார் விக்ரம். படத்தின் முன்னோட்ட வீடியோவில் விக்ரமின் உழைப்பு மிரட்டலாக இருந்தது.
கதாநாயகிகளுள் ஒருவரான மாளவிகா மோகனனும், “இதுவரை நான் நடித்ததில் எனக்குச் சவாலான கதாபாத்திரம், ‘தங்கலான்’-இல்தான் கிடைத்தது. அதில் எனது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் ‘தங்கலான்’ இப்போது எந்தக் கட்டத்தில் உள்ளது என விசாரித்ததில் கிடைத்தவை இவை.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை அடுத்து பா.இரஞ்சித், விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘தங்கலான்’. 1800 மற்றும் 1900 ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது. கோலார் தங்க வயல் குறித்தான கதை இது. ‘கே.ஜி.எஃப்’ எப்படி உருவானது, அதற்காக நம் மக்கள் கொடுத்த விலை என்ன உட்படப் பல்வேறு கோணங்களில் கதை நகர்கிறது என்கிறார்கள். இதற்காக கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னையிலும், மதுரையிலுமாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. விக்ரமுடன், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்படப் பலரும் நடிக்கின்றனர். ‘நட்சத்திரம் நகர்கிறது’ கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் கவனித்து வருகின்றனர். இப்போது பின்னணி இசையும், எடிட்டிங் வேலைகளும் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. இந்தப் படத்திற்காக விக்ரம், மாளவிகா எனப் பலருக்கும் மேக்கப்பிற்கே நான்கு மணிநேரம் செலவாகியிருக்கிறது. இதில் விக்ரம் 30 வயது இளைஞர், வயதான முதியவர் என இரண்டு தோற்றங்களில் வருகிறார் என்கிறார்கள்.

படத்தைத் தயாரித்து வரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தையும் தயாரித்து வருகிறது. ‘கங்குவா’ இன்னமும் படப்பிடிப்பில் உள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால், படத்தை ஏப்ரலுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். அதே சமயம், ‘தங்கலான்’ பொங்கலுக்கு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், பொங்கலுக்கு ‘லால் சலாம்’, ‘அயலான்’, ‘அரண்மனை 4’ என இப்போதே லிஸ்ட் இருப்பதால், படம் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியான பிறகு, ரிலீஸை அறிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே, விக்ரம் ‘தங்கலான்’ படப்பிடிப்பை முடித்துவிட்டதால், அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார். சமீபத்தில் ஹிட் கொடுத்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்லியிருப்பதாகத் தகவல். அதில் ஒன்று அவருக்குப் பிடித்து விட்டது என்றும், அந்த லைனை டெவலப் பண்ணச் சொல்லியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.