வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க் : அமெரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளி தம்பதி, தங்களது இரு குழந்தைகளுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிளைன்ஸ்போரா என்ற பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேஜ் பிரதாப் சிங், 43, அவரது மனைவி சோனல் பரிஹார், 42, ஆகியோர் வசித்து வந்தனர்.
இத்தம்பதிக்கு, 10 வயதில் மகனும், 6 வயதில் மகளும் இருந்தனர். தனியார் நிறுவனம் ஒன்றில், தேஜ் பிரதாப் சிங் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக தேஜ் பிரதாப் சிங்கின் வீடு பூட்டிக் கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தேஜ் பிரதாப் சிங் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தேஜ் பிரதாப் சிங், சோனல் பரிஹார் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து தகவல் அளிக்கும்படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement