சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கும் உயர்நிலை குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 2023-24-ம் ஆண்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2022-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி 110 விதியின் கீழ் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி எழுதிய கடிதத்தில், அவர்களது தொகுதிகளில்நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டச்செயலாக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை 2022-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.