பெங்களூரு: கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைசூரு மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை பிரபலப்படுத்த வேண்டும். கன்னடம் இங்கு இன்றியமையாத மொழியாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் கன்னடர்கள்தான்.
கர்நாடகா மாநிலமாக இணைந்த பிறகு பல்வேறு மொழி பேசும் மக்கள் கன்னட நிலத்தில் குடியேறினர். கன்னடியர்கள் நம் மொழியை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் மொழியை நாம் கற்றுக்கொண்டோம். இதனால், கர்நாடகாவின் சில பகுதிகளில் புலம்பெயர் மக்கள் கன்னடம் பேசவே இல்லை. கன்னடர்களின் பெருந்தன்மையால் இது நடக்கிறது.
பிற மொழிகளை நேசிக்க வேண்டும்தான். ஆனால், நம் மொழியை நாம் மறக்கக் கூடாது. பல ஆண்டுகளாக கன்னடம் அலுவல் மொழியாக இருந்தும், நிர்வாகத்தில் கன்னடம் அமல்படுத்தப்படாததற்கு அலட்சியமே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். எனவே, கர்நாடகாவில் வசிக்கும் அனைவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேசாத பிற மாநில குடியிருப்பாளர்கள் உங்கள் அருகில் வசித்தால் அவர்களுக்கு கன்னட மொழியைக் கற்க கர்நாடக மக்கள் உதவ வேண்டும்” இவ்வாறு பேசினார்.