கான் யூனிஸ், ”ஹமாஸ் பயங்கரவாதிகளின் படை பலம் மற்றும் அரசு நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான தொலைபேசி உரையாடலின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் நேற்று, 11வது நாளாக தொடர்ந்தது.
இந்த போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், காசா பகுதியில், 2,778க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் குழந்தைகள் என, காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் புதைந்து போனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காசாவின் வடக்கு பகுதியை தரைவழியே முற்றுகையிட போவதாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம், அங்குள்ள பொதுமக்களை தெற்கு காசாவிற்கு செல்லும்படி அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் அளித்து, தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியது. ஆயிரக்கணக்கானோர் தெற்கு காசா பகுதிக்கு நகர்ந்தனர்
இந்த வேளையில், நேற்று தெற்கு காசாவில் உள்ள ரபா மற்றும் கான் யூனிஸ் நகரங்களில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இதில் ரபா நகரில், 27 பேரும், கான் யூனிசில், 30 பேரும் உயிரிழந்ததாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான பசேம் நெய்ம் தெரிவித்தார்.
டெய்ர் அல் பலாஹ் நகரில் நடந்த விமான தாக்குதலில் வீடு தரைமட்டமானதில், அங்கு வசித்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.
இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கொடூர கொலைகாரர்களால் இஸ்ரேல் தாக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ மற்றும் ஆட்சி நிர்வாக திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும். இதில், இஸ்ரேல் ஒன்றுபட்டு உறுதியாக உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் ஓயாது என, ரஷ்ய அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் தொலைபேசியில் உரையாடியதை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியது.
அப்போது, இஸ்ரேல் – – காசா இடையே வன்முறை மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து புடின் விவரித்தார்.
இரு தரப்புக்கும் இடையேயான இந்த போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அதிபர் புடின் எடுத்துரைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளில், மியா ஷெம் என்ற, 21 வயது பெண்ணின், ‘வீடியோ’வை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று வெளியிட்டனர்.
அதில், அந்த பெண் கையில் கட்டு போட்டபடி, பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில், ‘நான் ஷோஹமை சேர்ந்தவர். இப்போது காசா பகுதியில் இருக்கிறேன். நான் விரைவில் வீடு செல்ல வேண்டும். சீக்கிரமாக என்னை விடுவியுங்கள்’ என, கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
காத்திருக்கும் உதவி பொருட்கள்!
காசா மருத்துவமனைகளில் குடிநீர், மருந்துகள் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. எரிபொருள் எந்த நேரமும் தீர்ந்து போய் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காசாவை எகிப்துடன் இணைக்கும் ரபா எல்லையில், உதவி பொருட்கள் லாரிகளில் காத்திருக்கின்றன. அந்த பொருட்கள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எல்லையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்து, உதவி பொருட்களை அனுமதிக்க பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.அந்த உதவி பொருட்களை ஏற்றி வந்துள்ள லாரிகளை சோதனையிட்ட பின், அவற்றை காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக, எகிப்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பைடன் இன்று வருகை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக, அவர் அந்நாட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது. மேலும், ஜோர்டான் சென்று பல்வேறு அரபு நாட்டு தலைவர்களை சந்திக்கவும் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்