இஸ்லாமாபாத்: கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிட்டனில் தஞ்ச மடைந்திருந்த, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 73, நேற்று நாடு திரும்பினார். அவருக்கு கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் தலைவர் நவாஸ் ஷெரீப்.
கடந்த 2016ல், ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பல நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்த மோசடி வெளியானது.
இதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தார் பெயரும் இடம்பெற்றிருந்தது.
அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்ததால், பிரதமர் பதவியில் இருந்து, 2017ல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 2019 நவம்பரில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறி சென்றார்.
நவாஸ் ஷெரீப் தொடர்பான ஊழல் வழக்குகளை சமீபத்தில் விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நாளை மறுதினம் வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் பொருளாதார பாதிப்பும், அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
தற்போது அங்கு இடைக்கால அரசே அமைந்துள்ளது. பார்லி மென்டுக்கு வரும் ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில், மூன்று முறை பிரதமராக இருந்துள்ள நவாஸ் ஷெரீப், தன் ஆதரவாளர்கள், 150 பேருடன், தனி விமானத்தில் இஸ்லாமாபாதுக்கு நேற்று வந்தார்.
நான்கு ஆண்டுக்குப் பின் நாடு திரும்பிய அவருக்கு கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர். உடனடியாக லாகூர் சென்ற அவர், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்