பெண் வங்கி அதிகாரி கத்தியால் குத்தி கொலை; வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை
வானுார்: திண்டிவனம் அடுத்த கிளியனுார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால், காதலி காருக்குள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில், கள்ளக்காதலன் வாகனம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு, டிஎன் 41 ஏடி 2388 என்ற பதிவெண் கொண்ட ‘டபிள்யூ ஆர்வி ஹோண்டா’ கார் வந்து கொண்டிருந்தது. கிளியனுார் புறவழிச்சாலையில், கூழ்கூத்தப்பாக்கம் அருகே வந்தபோது, திடீரென காரை ஓட்டி வந்தவர், சாலையோரமாக காரை நிறுத்தினார். பின், சாலையின் தடுப்புக் கட்டையில் சில நிமிடம் அமர்ந்திருந்தவர், கண் இமைக்கும் நேரத்தில், அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக், எஸ்.பி., சசாங்சாய் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் தற்கொலை செய்து கொண்ட நபரின் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை கைப்பற்றி, காரை திறந்து பார்த்தனர். காரின் முன்பக்க சீட்டில், பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரின் அடையாள அட்டையை எடுத்து பார்த்த போது, ஒரே தனியார் வங்கியின் இரு வேறு கிளைகளில் மேலாளர்களாக இருவரும் புணிபுரிந்து வந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:
சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கோபிநாத், 37; புதிதாக துவங்கப்பட்டுள்ள மரக்காணம் தனியார் வங்கியின் கிளை மேலாளர். திருமணமாகி 2 குழந்தைகளுடன், புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, வடகுத்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மதுரா பாண்டீஸ், 32; இவரது கணவர் பாண்டீஸ். ஒரு குழந்தை உள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை, அவ்வை நகரில் வசித்து வந்துள்ளார்.
மதுரா பாண்டீஸ், கடந்த 6 மாதங்களாக ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரத்தில் உள்ள வங்கியில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்த போது, இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று கோபிநாத், மதுரா பாண்டீசை அழைத்துக் கொண்டு காரில் வந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த கோபிநாத், அவரை காருக்குள்ளேயே கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. பின்னர் அவரும் வாகனம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
அல்லது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுரா பாண்டீஸ் தன்னைத்தானே கத்தியால் கழுத்தில் குத்திக் கொண்டதால், பயத்தில் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், கோபிநாத் மீது மோதிய வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
புதுடில்லியில் கை, கால்கள் கட்டப்பட்டு சுவிட்சர்லாந்து பெண் கொடூர கொலை
புதுடில்லி : புதுடில்லியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து, சாலையில் வீசி சென்ற அவரது ஆண் நண்பரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுடில்லி திலக் நகரில் உள்ள அரசு பள்ளி வளாகம் அருகே, நேற்று முன்தினம் பிளாஸ்டிக் கவரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கண்காணிப்பு கேமரா
போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் நிகழ்ந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், கடந்த 19ம் தேதி இரவு, சம்பவ இடத்தில் அப்பகுதிக்கு வந்த காரில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இந்த உடலை, மர்ம நபர் ஒருவர் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த காரின் பதிவு எண்ணை வைத்து, குற்றவாளியை தேடும் பணியை போலீசார் துரிதப்படுத்தினர்.
இதன் அடிப்படையில் புதுடில்லி சாணக்கிய புரி பகுதியைச் சேர்ந்த குருப்ரீத் சிங், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டமிட்டு கொலை செய்த அவர், இதில் இருந்து தப்பிக்க, சமீபத்தில் வேறு ஒருவரின் பெயரில் உள்ள பழைய காரை வாங்கி, கொலைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பெண், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நினா பெர்கர், 30, என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
குருப்ரீத் சிங், சுவிட்சர்லாந்துக்கு சென்றபோது, நினா பெர்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இவரைப் பார்க்க, குருப்ரீத் சிங், அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். அப்போது மற்றொரு நபருடன், தன் தோழி பழகியதால் ஆத்திரம் அடைந்த அவர், கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்காக, நினா பெர்கரை இந்தியாவுக்கு வரவழைத்து, பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றி காண்பித்தார்.
ரூ.2.25 கோடி
ஐந்து நாட்களுக்கு பின், அவரை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி கொலை செய்தார்.
அதன்பின், அந்த உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, தன் காரில் வைத்து புதுடில்லியை வலம் வந்தார். இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசவே, சாலையில் உடலை வீசி விட்டுச் சென்றார்.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். அவரது வீட்டில் சோதனையிட்டதில், 2.25 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.50லட்சம் மோசடி கணவன், மனைவி மீது வழக்கு
தேனி: நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் குமரேசன், மனைவி காயத்ரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சத்யா, கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குமரேசன், அவரது மனைவி காயத்ரி கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய சத்யா 2021 ஏப்ரலில் ரூ.3.50 லட்சத்தை வழக்கறிஞர், மனைவியிடம் வழங்கினார். பின்னர் இருவரும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்யா, தேனி எஸ்.பி., பிரவின் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தார். இதையடுத்து கணவர், மனைவி மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடகு நகையை மீட்ட போது கவரிங் தந்ததால் அதிர்ச்சி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலு, 50; விவசாயி. ஒரத்தநாட்டில் உள்ள யூனியன் வங்கி கிளையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நெக்லஸ், இரண்டு மோதிரம், மூன்று செயின் என, 8.5 சவரன் நகைகளை அடகு வைத்தார்.
நேற்று அடகு வைத்த நகைகளை, வட்டியுடன் சேர்த்து, 1.93 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி மீட்டுள்ளார்.
![]() |
அப்போது, மீட்கப்பட்ட நகை எடை, 8.75 சவரனாக இருந்தது. தான் அடகு வைத்த நகையை விட, 25 மில்லி கிராம் கூடுதல் எடைக்கு நகை திருப்பி தரப்பட்டதால், அந்த நகைகளை பாலு பரிசோதித்தார்.
அப்போது, 2.5 சவரன் செயின் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பாலு, வங்கி ஊழியர்களிடம் கேட்ட போது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். ஒரத்தநாடு போலீசில் பாலு புகார் அளித்தார். போலீசார் வங்கியில் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்