அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 16 பெண்கள் உட்பட மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை கடைசி நாள் ஆகும். வரும் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ல் நடைபெறுகிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் 25 பேர் எம்எல்ஏக்கள். எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக அனைத்து தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பாஜக 23, ஆம் ஆத்மி 4 இடங்களில் போட்டியிடுகின்றன. 27 பேர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்என்எப் 26, இசட்பிஎம் 8, காங்கிரஸ் 5, பாஜக 1 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்என்எப் 2 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் பலம் 28 ஆக அதிகரித்தது.