`சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்' – கொதித்த ஐ.நா பொதுச்செயலாளர்… பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல்!

கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸா மீது இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் காஸா தக்குதல்

எனவே, இந்தப் போரின் விளைவால் இஸ்ரேல், காஸா பகுதிக்குச் செல்லும், தண்ணீர், மின்சாரம், உணவுப்பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தடைசெய்தது. தங்களிடம் இருந்த எரிபொருள்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு மட்டும் மின்சாரம் வழங்கிவந்த காஸா, தற்போது அதுவுமின்றி தவித்து வருகிறது. சர்வதேச அரசியல் முன்னெடுப்பின் மூலம் ஐ.நா திரட்டிய உதவிகளை மட்டும் காஸாவுக்குள் செல்ல அனுமதித்திருக்கிறது இஸ்ரேல்.

இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ், “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சர்வதேச சமூகம் இதற்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ்

ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் 6 லட்சம் பாலஸ்தீனர்களை, மனித கேடயங்களாகப் பயன்படுத்தவே பாதுகாக்கப்படுவதாகக் கூறுவது தவறு. 10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காஸாவுக்கு பாதுகாப்பாக இடம்பெயரக் கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாகக் குடியேற்றங்களால் அவர்களின் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும், வன்முறையால் பாதிக்கப்படுவதையும் கண்டுவரும் பாலஸ்தீன மக்கள், பொருளாதார நெருக்கடியாலும், வீடுகளை இழந்தும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கவில்லை.

ஹமாஸின் திடீர் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காகப் பாலஸ்தீன மக்களுக்குத் தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. அவர்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கைகள் மறைந்து வருகின்றன. ஆனால், பாலஸ்தீன மக்களின் மனக்குறைகள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. அதே நேரம் இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன மக்கள் பலியாவதை, தண்டனை அனுபவிப்பதை நியாயப்படுத்த முடியாது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர்

பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனர்களும் காணவேண்டும்” என்றார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளரின் இந்தப் பேச்சுக்கு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், “நாங்கள் இஸ்ரேலுக்காகவும், முழு சுதந்திர உலகத்துக்காகவும் போராடுகிறோம். ஆனால், ஹமாஸை முற்றிலும் ஒழிக்க அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் செய்தியாளர்களிடம், “சபையில் பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் கூறிய கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் எல்லா அறநெறிகளையும், பாரபட்சமற்ற தன்மையையும் இழந்துவிட்டார். ஏனென்றால், நீங்கள் பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்கிறீர்கள்… பயங்கரவாதத்தைப் பொறுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறீர்கள். ஹமாஸ், குழந்தைகளின் தலைகளைத் துண்டித்தது, குடும்பங்களை எரித்தது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள், கடத்தப்பட்ட குழந்தைகள் எனக் குற்றச்செயல்கள் நீண்டுசெல்கின்றன. ஆனால், பொதுச்செயலாளர் இஸ்ரேலையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒன்றாகக் குற்றம்சாட்டுகிறார்.

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்

இது வெளிப்படையான அவதூறு. எனவே அவர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்துவோம். எங்கள் மக்களுக்கு நடந்த கொடூரமான அட்டூழியங்களைப் பொதுச்செயலாளர் தனது வார்த்தைகளால் எப்படி நியாயப்படுத்த முடியும்… கடந்த மூன்று ஆண்டுகளாக நான் இங்கு பணியாற்றி வருவதால், பொதுச்செயலாளரின் பாரபட்சமற்ற தன்மையை நான் பார்த்து உணர்ந்ததில்லை. ஆனால், இன்று அவர் வெளிப்படுத்திவிட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.